/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை நெல் கொள்முதல் மையங்களில் கமிஷன் கொடுக்காதீங்க... : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆறுதல்
/
மதுரை நெல் கொள்முதல் மையங்களில் கமிஷன் கொடுக்காதீங்க... : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆறுதல்
மதுரை நெல் கொள்முதல் மையங்களில் கமிஷன் கொடுக்காதீங்க... : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆறுதல்
மதுரை நெல் கொள்முதல் மையங்களில் கமிஷன் கொடுக்காதீங்க... : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆறுதல்
ADDED : ஜன 24, 2026 05:01 AM

மதுரை:நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை எடையிடுவதற்கு கமிஷன் கொடுக்காமல் எங்களிடம் புகார் தெரிவியுங்கள்' என மதுரையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் சாந்தி, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ( டி.என்.சி.எஸ்.சி.,) மணிகண்டன் பங்கேற்றனர்.
முதன்முறையாக அனைத்து கேள்வி பதில்களும் அந்தந்த விவசாயியின் பெயர் வாசிக்கப்படும் போது அகன்ற திரையில் வெளியானதை விவசாயிகள் வரவேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்: ரவி, கொட்டக்குடி, பார்த்தசாரதி, திருவாலவாயநல்லுார், நாகேந்திரன், சமயநல்லுார்: நெல் கொள்முதல் மையத்தில் ஒவ்வொரு மூடைக்கும் கமிஷன் கேட்கின்றனர். லாரிகள் குறைவாக இருப்பதால் எடையிட்ட மூடைகளை உடனுக்குடன் கோடவுனுக்கு அனுப்ப முடியவில்லை. பிற மாவட்டங்களின் நெல் மூடைகளை இங்கு இருப்பு வைப்பதால் லாரிகளில் எங்கள் நெல் மூடைகளை கொண்டு செல்ல முடியவில்லை. மையத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
டி.என்.சி.எஸ்.சி., மண்டல மேலாளர்: கமிஷன் கொடுக்காதீர்கள் என்று சொன்னால் விவசாயிகள் கேட்பதில்லை. புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கிறோம். லாரிகள் போதுமான அளவு உள்ளன.
நாகராஜன், குலமங்கலம்: தனியார் கடைகளில் மரபணு மாற்றப்பட்ட, போலி நெல் விதைகளை விற்பதால் விளைச்சல் குறைகிறது.
வேளாண் இணை இயக்குநர்: அனைத்து தானியங்களுக்கான நுாறு சதவீத விதைகளை அரசே உற்பத்தி செய்ய முடியாது. தரச்சான்று, லைசென்ஸ் உள்ள தனியார் விற்பனை நிலையங்களில் சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் வாங்கலாம். எந்த கடையில் போலி விதைகள் விற்கப்பட்டதென தெரிவிக்க வேண்டும்.
பூங்கொடி, கே.போத்தம்பட்டி: கால்நடை பராமரிப்பு கடன் தராமல் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏமாற்றுகின்றனர். உறுப்பினராகவும் சேர்க்கவில்லை.
எம்.டி.சி.சி., நிர்வாக இயக்குநர்: கால்நடை பராமரிப்பு கடன் வாங்கியதில் ரூ.ஒரு கோடி வரை கடன் வசூலாகவில்லை. பயிர்க்கடனுக்கு மட்டும் ரூ.101 கோடி வரை வசூலாகவில்லை. 27ஆயிரம் விவசாயிகளிடம் வசூல் செய்து வருகிறோம். இதனால் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம்.
நாகேந்திரன், சமயநல்லுார்: ஈரோடு, பெருந்துறையிலும் மதுரையில் பெரும்பாலான கடைகளில் எடைக்கணக்கில் தேங்காய் விற்கின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையைக் குறைப்பதால் விவசாயிகளுக்கு தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை.
வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி: வியாபாரிகள் கேட்கும் விலை கட்டுப்படியாகாவிட்டால் விவசாயிகள் விற்பதில்லை. மத்திய அரசின் இ- நாம், மறைமுக ஏலம் மூலம் தமிழகத்திலேயே மதுரையில் தான் மட்டையுடன் கூடிய தேங்காய்கள் விற்பனையாகிறது. தேங்காய் உரித்து கொண்டு வரப்பட்டால் எடை கணக்கு குறித்து வியாபாரிகளிடம் பேசலாம்.
பழனிசாமி, கே.கே.நகர்: அலங்காநல்லுார் தேசிய சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். அரசிடம் அனுமதி வாங்கிய பின்பே தனியார் ஆலைகள் விவசாயிகளிடம் கரும்புகளை எடுக்க உத்தரவிட வேண்டும். மதுரையில் தென்னை நர்சரி பண்ணை அமைக்க வேண்டும்.
மகாராஜன், கருமாத்துார்: நீர்வளத்துறை வாய்க்காலில் பஞ்., யூனியன் தடுப்பணை கட்டியதால் க.செட்டிகுளம் கண்மாயில் தண்ணீர் வராமல் 100 ஏக்கர் பாசன நிலம் வீணாகிறது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தடுப்பணையை உடைத்தால் தான் தண்ணீர் கிடைக்கும்.
மணிகண்டன், உசிலம்பட்டி: 58 கிராம இடதுபுற கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஜீப் டிராக் செல்லும் வழித்தடம் அமைக்க வேண்டும். கலெக்டர் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.
கலெக்டர் : சர்க்கரை ஆலை திறப்பது அரசின் கொள்கை முடிவு. தோட்டக்கலை சார்பில் மேலுார் பூஞ்சுத்தி பண்ணையில் தென்னங்கன்று உற்பத்தியாகிறது. ஆறு மாதத்திற்கு முன்பாக விவசாயிகள் தெரிவித்தால் கன்றுகள் உற்பத்தி செய்து தரப்படும். தமிழகத்தில் எங்கேயும் உணவு தானியங்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தவில்லை. அதிகாரிகளுடன் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கும் கேள்வி பதில் நகல் வழங்கப்படும்.
நெல் கொள்முதல் மையம் குறித்த பிரச்னைகளை தனியாக கையாள டி.என்.சி.எஸ்.சி., மண்டல மேலாளர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். 58 கிராம கால்வாயை நேரில் ஆய்வு செய்கிறேன் என்றார்.

