ADDED : டிச 29, 2024 04:41 AM

மதுரை: மதுரையில் அரசு பஸ்களில் விபத்துகளை குறைக்க சமீபகாலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகம் விபத்துகளை குறைக்க சில ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் பஸ்களின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிவிடாமல் இருக்க, பஸ்களின் இருபுறமும் படிக்கட்டுகளுக்கு இடையே அடிப்பகுதியில் நீளமான, அகலம் குறைந்த துணி போல அமைத்துள்ளனர். பக்கவாட்டில் இருந்து யாராவது விழுந்தால் அவர் சக்கரங்களுக்கு இடையே சிக்காமல் அவரை வெளியே தள்ளிவிடும். இதனை தாழ்தள பஸ்களை தவிர பிற டவுன்பஸ்களில் அமைத்து வருகின்றனர்.
அதுபோல படிக்கட்டு பயணத்தை தடுக்க பஸ்களில் தானியங்கி கதவு அமைத்து வருகின்றனர். குறிப்பாக இவை மொபசல் பஸ்களில் அமைக்கப்படுகிறது. இந்த ஏற்பாடு குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிய பஸ்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன்படி பஸ்களின் சக்கரங்களுக்குள் சிக்காமல் இருக்க தொழில்நுட்ப ஏற்பாடுடன் 'அண்டர் ரன் புரொடெக் ஷன்' என்ற வகையில் துணிபோன்று அமைக்கப்பட்டுள்ளது.
டவுன் பஸ்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொபசல் மற்றும் சாதாரண டவுன் பஸ்களில் கதவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 16 டிப்போக்களில் 900க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தாழ்தள பஸ்களை தவிர மற்றவற்றில் அமைக்கப்படுகிறது'' என்றனர்.