/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே இரவில் மதுரையில் இரட்டை கொலை
/
ஒரே இரவில் மதுரையில் இரட்டை கொலை
ADDED : டிச 10, 2025 08:07 AM

திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் மதுபோதையால் ஒரே இரவில் அடுத்தடுத்து இரு கொலைகள் நடந்தன.
மதுரை, கப்பலுாரை சேர்ந்தவர் கல்யாணகுமார், 19. நேற்று முன்தினம் அதிகாலை, 12:30 மணிக்கு, கப்பலுார் பகுதியில் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்பகுதியை சேர்ந்த போஸ், 74, என்பவர் அங்கே சென்றபோது, அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளார்.
அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது, அங்கிருந்து தப்பி கப்பலுார் டோல்கேட் அருகே வந்துள்ளார்.
அப்போது, டி.கல்லுப்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் அழகர்சாமி, 42, திருவண்ணாமலை செல்வதற்காக உறவினர்கள் வருகையை எதிர்பார்த்து டோல்கேட் அருகே காத்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் கல்யாணகுமார், 'இப்போது டைம் என்ன?' என்று கேட்டு தகராறு செய்தார். அழகர்சாமி அங்கிருந்து செல்ல முயன்றபோது, கல்யாணகுமார் அரிவாளால் பின் தலையில் வெட்டியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை சரமாரியாக தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு, அரிவாளோடு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அவரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்தவர் பெத்துராஜ், 48. சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் கம்பெனியில் தங்கி வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு, சக தொழிலாளருடன் நடந்த தகராறில், சக தொழிலாளி முடுவார்பட்டி பாண்டி, 37, என்பவர், இரும்பு கம்பியால் அடித்ததில் சம்பவ இடத்திலேயே பெத்துராஜ் உயிரிழந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

