/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து எம்.பி., வெங்கடேசன் வாய் திறக்காதது ஏன் டாக்டர் சரவணன் கேள்வி
/
மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து எம்.பி., வெங்கடேசன் வாய் திறக்காதது ஏன் டாக்டர் சரவணன் கேள்வி
மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து எம்.பி., வெங்கடேசன் வாய் திறக்காதது ஏன் டாக்டர் சரவணன் கேள்வி
மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து எம்.பி., வெங்கடேசன் வாய் திறக்காதது ஏன் டாக்டர் சரவணன் கேள்வி
ADDED : ஜூலை 11, 2025 03:48 AM
மதுரை: ''அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தும்மினால் கூட அதில் குறையை கண்டுபிடித்து விளம்பரம் தேடும் எம்.பி., வெங்கடேசன், மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. முதல்வர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவா'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2011ல் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.250 கோடியை ஜெயலலிதா வழங்கினார். ஸ்மார்ட் திட்ட பணிகளுக்கு பழனிசாமி ஆயிரம் கோடி ரூபாய் வழங்கினார். 100 வார்டுகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1292 கோடியில் குடிநீர் திட்டத்தை வழங்கினார். ரூ. 50 கோடியில் மாசி வீதிகளில் சாலைப்பணிகள், ரூ.ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர தண்ணீர் தேக்கம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள், ரூ.300 கோடிக்கு மேல் வைகை கரைகளில் சாலை வசதி என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பதவிகளை பிடித்த தி.மு.க., எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை.
மாநகராட்சியில் 2021--22ல் ரூ.430 கோடி, 2022--23ல் ரூ.1251 கோடி, 2023--24ல் ரூ.1751 கோடி, 2024--25ல் ரூ.1296 கோடி, 2025--26ல் ரூ.1480 கோடிக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த நான்காண்டுகளில் சரிவர சாலைகள் அமைக்கவில்லை,
முதல்வர் வருகிறார் என்றால் அவர் வரும் சாலை மட்டும் புதிதாக அமைக்கப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகளை வெள்ளை அறிக்கைய விட வேண்டும். ரூ.200 கோடிக்கு மேல் வரிமுறைகேட்டை செய்துள்ளார்கள். இதுகுறித்து மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன் வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தும்மினால் கூட அதில் குறையை கண்டுபிடித்து விளம்பரம் தேடும் வெங்கடேசன், மாநகராட்சி முறைகேடு குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. முதல்வர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவா.
இவ்வாறு கூறினார்.