/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் 432வது ஆண்டாக நாடகம்
/
குன்றத்தில் 432வது ஆண்டாக நாடகம்
ADDED : மார் 12, 2026 04:56 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெயில் உகந்த அம்மன் மாசி உற்ஸவ பொங்கல் விழாவின் உச்சநிகழ்ச்சியில் 432வது ஆண்டாக மதுரை வலையங்குளம் திருமலை மெச்சனார் குடும்பத்தினர் சார்பில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடந்தது.
உற்ஸவ விழா மார்ச் 2ல் தொடங்கியது. நேற்று முன்தினம் சட்டத்தேரில் அம்மன் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் முடிந்து கோயில் முன்பு சட்டத்தேர் நிறுத்தப்பட்டது. இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 5:00 மணி வரை கோயில் முன்பு நாடகம் நடந்தது.
நாகராஜ் கூறியதாவது: 7வது தலைமுறையாக நாடகம் நடத்துகிறோம். மன்னர் திருமலை நாயக்கர், எங்களது மூதாதையர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு நாடகம் நடத்தியதை பார்த்து பாராட்டி செப்பு பட்டயம் வழங்கியுள்ளார். இந்தாண்டு வரை தொடர்ந்து நாடகம் நடத்தி வருகிறோம்.
இந்த நாடகம் நடத்த எங்களுக்கு கோயிலில் இருந்து மாலை, மரியாதை செய்வர். 64 உப்பில்லா கட்டிகள், ஆறு மரக்கால் புளிச்சாறு, ரூ. 3 ஆயிரம் வழங்குவர். 12 பங்காளிகள் உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பங்காளி குடும்பம் சார்பில் நாடகம் நடத்தப்படும். நாடகம் நடத்த ரூ. 50 ஆயிரம் செலவாகும். சொந்த செலவில் நடத்துகிறோம் .
கோயில் மரியாதை, நாடகக்கலை காப்பாற்றப்பட வேண்டும், தமிழ்க் கலாசாரம், தொன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நாடகம் நடத்துகிறோம் என்றார்.

