/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீரோ 'நில்...' கழிவுநீரோ 'புல்...'
/
குடிநீரோ 'நில்...' கழிவுநீரோ 'புல்...'
ADDED : பிப் 16, 2024 05:45 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 77வது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பால் வீடுகளில் கழிவுநீர் புகுதல், குடிநீர் தட்டுப்பாடு, குப்பையால் கொசு உற்பத்தி, தொற்றுநோய் அபாயம் என பிரச்னையில் சிக்கி தவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இவ்வார்டு சுப்ரமணியபுரம் 1- 4 தெருக்கள், பள்ளிவாசல் தெரு, ராஜா தெரு குறுக்கு தெரு, எம்.கே.புரம் 1- 5 தெருக்கள், அஞ்சல் காலனி குடிசைப் பகுதி, தெற்கு சண்முகபுரம், சுண்ணாம்பு காளவாசல், அக்ரிணி குடியிருப்பு, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு தினசரி காய்கறிமார்கெட் நடக்கிறது. தினந்தோறும் கொட்டப்படும் குப்பை, போதிய பணியாளர்கள் இல்லாததால் மலைபோல் குவிந்து விடுகிறது. இதனால் மக்கள் முகம் சுளித்தபடியே நடமாட வேண்டியுள்ளது.
கல்யாணி, சுப்ரமணியபுரம்: பல ஆண்டுகளுக்கு முன் குறைவான மக்கள் தொகை இருந்த போது அமைத்த பாதாள சாக்கடை குழாய்களில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டு கழிவறையிலும் சாக்கடை நீர் வருகிறது. மதுரை கல்லுாரி பாலத்தின் கீழ்பகுதியில் நடந்து செல்ல முடியவில்லை. பல நாட்கள் ஆகியும் இப்பிரச்னை தீரவில்லை. தற்போது இப்பகுதியில் ஏராளமான வீடுகள் வந்துள்ளது. அதற்கேற்ப பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். பம்பிங் ஸ்டேஷனையும் விரிவு படுத்த வேண்டும்.
விமலா, தெற்கு சண்முகபுரம்: எங்கள் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. அதுவும் மிகமிகக் குறைவாக வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் மகபூப்பாளையம் தண்ணீர் தொட்டியில் இருந்து இப்பகுதிக்கு வரும் குழாயின் வால்வில் கோளாறு உள்ளதாகக் கூறுகின்றனர். இதனை சரிசெய்யாததால், குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம். சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வாரம் ஒரு முறையாவது கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
கவுன்சிலர் ராஜ்பிரதாபன் (காங்): குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.62 கோடி செலவில் 366 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் 20 ஆண்டுகளாக ரோடு வசதியின்றி இருந்த பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் பேவர்பிளாக் ரோடு, மழைநீர் வடிகால் வாய்க்கால் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. சுப்ரமணிபுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டும் பணிகள் நடக்கிறது. எம்.பி., நிதியில் இருந்து நுாலகத்திற்கு புதிய கட்டடம் உட்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் குறைகளை என்னிடம் தெரிவித்ததும், அதனை மேயர், அதிகாரிகளுக்கு தெரிவித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன். துாய்மைப் பணி ஆட்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் குப்பையை தேங்க விடாமல் எடுத்துச் செல்லலாம், என்றார்.