/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவையற்ற வழக்குகளால் டிரைவர் அலைக்கழிப்புபோக்குவரத்துக் கழகம் ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவு
/
தேவையற்ற வழக்குகளால் டிரைவர் அலைக்கழிப்புபோக்குவரத்துக் கழகம் ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவு
தேவையற்ற வழக்குகளால் டிரைவர் அலைக்கழிப்புபோக்குவரத்துக் கழகம் ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவு
தேவையற்ற வழக்குகளால் டிரைவர் அலைக்கழிப்புபோக்குவரத்துக் கழகம் ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவு
ADDED : மே 23, 2025 02:43 AM
மதுரை:மதுரை செல்வகணபதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2013 ல் டிரைவராக (ரிசர்வ்) நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 480 நாட்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டேன். சட்டப்படி எனது பணியை போக்குவரத்துக் கழகம் வரன்முறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. பணிவரன்முறைப்படுத்த உத்தரவிடக்கோரி தொழிலாளர் ஆய்வாளரிடம் மனுவை தாக்கல் செய்தேன். அவர் எனக்கு நிரந்தர பணியாளருக்குரிய அந்தஸ்து வழங்க 2015 ல் உத்தரவிட்டார். அதை போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிறைவேற்றவில்லை.
நிறைவேற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவிற்கு எதிராக போக்குவரத்துக் கழக நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அதை மறு சீராய்வு செய்ய நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அது விசாரிக்கப்படவில்லை.
சில அலுவலர்களின் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக எனக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படுவதைத் தடுக்க நிர்வாகம் அனைத்து வகை தந்திரங்களையும் கையாண்டது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழக போக்குவரத்துத்துறை செயலர், போக்குவரத்துக் கழக மதுரை மேலாண்மை இயக்குனருக்கு 2019 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
நிர்வாகம் தரப்பு: மனுதாரர் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். மனுதாரரின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: நிர்வாகத்தால் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம், மனுதாரருக்கு எதிராக நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள் கையாளப்பட்டதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுகளுக்குப் பிறகும் தேவையற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.
மனுதாரரை தேவையின்றி வழக்குகள் மூலம் அலைக்கழிப்பு செய்ததற்காக, நீதியின் நலன் கருதி, அவருக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றார்.