ADDED : அக் 25, 2025 05:54 AM
அவனியாபுரம்: துபாயிலிருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து துபாய்க்கும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தினமும் உள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த விமானம் அக். 17 முதல் அக். 25 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து குறித்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்கனவே நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை கவனிக்காமல் நேற்று ஒரு பயணி மட்டும் துபாய் செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அவரிடம் விமான சேவை இல்லை என்ற விபரத்தை கூறி, அக். 26 ல் வருமாறு நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் விமானசேவை ரத்தானதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதில் உண்மையில்லை; தினமும் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரையில் இருந்து துபாய் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

