/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு
/
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு
ADDED : ஆக 16, 2025 03:31 AM
மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியதற்கான ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை மீண்டும் வழங்க துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. பணிச்சூழல் காரணமாக விடுமுறை எடுக்காமல் எத்தனை நாட்கள் பணியாற்றுகிறார்களோ, அந்நாளுக்குரிய சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காரணமாக இச்சலுகை ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் அறநிலையத்துறையின்கீழ் உள்ள சில கோயில்களில் வருமானத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் வழங்கப்பட்டது. பல கோயில்களில் அரசு உத்தரவை காரணம்காட்டி மறுக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஈட்டிய விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்தல் நெருங்குவதையொட்டி சமீபத்தில் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி அறநிலையத்துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பிற்கான சம்பளத்தை வழங்க கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் ஊழியர்கள் கூறியதாவது: கோயில் வருமானத்தில் இருந்தே எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதால் கொரோனா காலத்தில் எங்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ரத்து செய்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் சில கோயில்களில் வழங்கப்படவில்லை. இச்சூழலில் அனைத்து ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பிற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குரிய நிலுவைத்தொகையும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றனர்.