/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை தேவை
/
அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை தேவை
ADDED : ஆக 15, 2025 02:49 AM

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சோழவந்தான் சுற்றுவட்டார பகுதி மக்கள் இம்மருத்துவமனையை நம்பி உள்ளனர்.
உடல்நலக்குறைவு மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு இம்மருத்துவமனை அவர்களுக்கு பேருதவியாக உள்ளது. ஆனால் மருத்துவமனைக்குரிய அடிப்படை வசதிகள் இல்லாததால், முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் மங்கையர்க்கரசி கூறியதாவது: மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. இருக்கும் படுக்கைகள் சேதமடைந்து மோசமாக உள்ளன. போர்வை, தலையணை உறைகள் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகள் சிலர் தரையில் படுத்து சிகிச்சை பெறுகின்றனர். கழிவறை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. தண்ணீர், விளக்கு வசதியும் இல்லை. ஆண்கள் வார்டு பகுதியில் தரையில் பதித்த 'டைல்ஸ்' கற்கள் காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
வளாகத்தில் துாய்மைப் பணி நடக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. சாதாரண நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மற்ற நோய்களுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.