/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் கூடுதல் வசதிக்கு வழிகாண வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
/
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் கூடுதல் வசதிக்கு வழிகாண வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் கூடுதல் வசதிக்கு வழிகாண வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் கூடுதல் வசதிக்கு வழிகாண வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 17, 2025 06:53 AM

மதுரை: ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் தவியாய் தவிக்கின்றனர்.
மதுரையின் பழமையான பஸ் ஸ்டாண்டில் முக்கியமானது ஆரப்பாளையம். இங்கிருந்து திண்டுக்கல், பழநி, தேனி, கூடலுார், கரூர், ஈரோடு, கோவை நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு பஸ்கள் நிற்க போதிய இடமில்லாததுடன், பயணிகளுக்கும் பல வசதிக்குறைவுகள் உள்ளன.
நுழைவு வாயில், பேவர்பிளாக் கற்கள், பயணிகள் இருக்கைஅமைக்க ரூ. 2 கோடி செலவில் பணிகள் நடப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதேசமயம் அவசிய தேவையான குடிநீர், கழிப்பறைக்கு அங்கும் இங்கும் அல்லாடுவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். குடிநீர்டேங்க்குகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் தண்ணீர் இல்லை. கட்டண கழிப்பறை இருக்கிறது. அவை போதுமானதாக இல்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கானதனி கழிப்பறைகள் பூட்டிய நிலையில், சுகாதார கேடுடன் உள்ளது. கால்வாய் உடைந்து கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது.
உடைந்தும், பழமையாகவும் உள்ள கட்டடங்களில் உணவகம், பூக்கடை செயல்படுகின்றன. பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் வயதானோர் அமர இருக்கை வசதியும் இல்லை.
வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என்ற அறிவிப்புப் பலகையின் கீழே நிறுத்தியுள்ள இருசக்கர வானங்களால் பெரும் இடையூறு உள்ளது.
பாதுகாப்பு இல்லைஎன்று தெரிந்தும் விழிப்புணர்வு இன்றி பயணிகள் நிறுத்தி செல்கின்றனர். அவசரத்திற்கு பயன்படுத்தும் தாய்மார் பாலுாட்டும் அறை பூட்டியே கிடப்பதால் பாழடைந்து வருகிறது.
பஸ் கால அட்டவணை பலகை அபாயகரமாக தொங்குகிறது. சிட்டி பஸ்கள் கிடைக்கும் இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.
இதனால் எந்நேரமும் வாகன நெரிசலாக உள்ளது. பயணிகளை இழுத்துச் செல்லாத குறையாக ஆட்டோ ஓட்டுனர்கள் ஆள்சேர்க்கின்றனர்.
இடப் பற்றாக்குறையால் 2011ல் கோச்சடை லாரி நிறுத்தத்தில்மாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் நிதி நிலை காரணமாக அறிவிப்புடன் நின்றுவிட்டது.
2014ல் விளாங்குடியில் 20 ஏக்கர் இடத்திற்கு மாற்றப்படுவதாக ஆலோசித்தும் நிறைவேறவில்லை.
தற்போது நடக்கும் பணிகளில் பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் குறித்து திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

