/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உளுந்து, துவரை இறக்குமதி காலம் நீட்டிப்பு
/
உளுந்து, துவரை இறக்குமதி காலம் நீட்டிப்பு
ADDED : ஜன 02, 2024 11:32 PM
மதுரை:தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், செயலர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் கூறியதாவது:
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு டிச., 7 ல் மத்திய வணிகத்துறை அமைச்சகம் சார்பில் கலால்வரி விலக்குடன் பட்டாணி இறக்குமதிக்கு 2024, மார்ச் 31 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத காலத்திற்குள் பட்டாணியை இறக்குமதி செய்வது கடினம்.
இலங்கை வழியாக போக்குவரத்து நடைபெறுவதால் சில நேரங்களில் கப்பல் வந்து சேரவோ, கடல் கொந்தளிப்போ ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டாணி வந்து சேராது.
மியான்மர், ஆப்ரிக்காவில் இருந்து உளுந்து, மியான்மரில் இருந்து துவரம்பருப்பு, கனடா, அமெரிக்கா, மியான்மரில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. உளுந்து, துவரைக்கு ஆண்டுதோறும் கோட்டா அடிப்படையில் இவ்வளவு டன்கள் இறக்குமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அனுமதி அளிக்கும். மியான்மரில் உளுந்து உற்பத்தி அதிகரித்ததால் இந்தாண்டு இந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
உளுந்து, துவரை, மசூர் பருப்புகளை 2025, மார்ச் 31 வரை எவ்வளவு டன் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்த மூன்று பருப்புகளின் உற்பத்தியும் இந்தியாவில் மிகவும் குறைந்துள்ள நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டது பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.
தமிழகம், கேரளாவில் மட்டுமே பட்டாணி பருப்பு இறக்குமதி செய்கிறோம். பட்டாணி தவிர மீதியுள்ள பருப்புகளுக்கு இரண்டாண்டு கால அனுமதி உள்ளது. பட்டாணிக்கும் அதேபோல அனுமதி வேண்டும். லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால் மார்ச் 31க்கு பிறகு காலநீட்டிப்பு பெற முடியாது. தற்போது வழங்கப்பட்டுள்ள 3 மாத கால அனுமதியை 2025, மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும்.
கலால்வரி விலக்குடன் ஆஸ்திரேலியாவில் இருந்து கஸ்பா, டன் வகை பட்டாணி இறக்குமதி செய்வதற்கும் அனுமதி அளிக்கவேண்டும். இதன் மூலம் பட்டாணியிலிருந்து உடைத்த பட்டாணி பருப்பு மற்றும் மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக, ஆந்திர, கேரளா, கர்நாடகாவில் உள்ள ஆலைகள் செயல்படும்.
இறக்குமதி தடையால் ஆலைகள் இயங்காமல் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 2000 ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கினால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.