/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் இயந்திர நடவில் விவசாயிகள் ஆர்வம் வேலையாட்கள் பற்றாக்குறையால்
/
நெல் இயந்திர நடவில் விவசாயிகள் ஆர்வம் வேலையாட்கள் பற்றாக்குறையால்
நெல் இயந்திர நடவில் விவசாயிகள் ஆர்வம் வேலையாட்கள் பற்றாக்குறையால்
நெல் இயந்திர நடவில் விவசாயிகள் ஆர்வம் வேலையாட்கள் பற்றாக்குறையால்
ADDED : நவ 04, 2024 05:18 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மானாவாரி பகுதியில் வேலையாட்கள் பற்றாக்குறையால் நெல் விவசாயிகள் இயந்திரமூலம் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கண்மாய்களின் தண்ணீர் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மானாவாரி கண்மாய் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் உள்ளன.
மானாவாரி பகுதிகளான தென்பழஞ்சி, வேடர் புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்பட பல்வேறு பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் பலர் இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்பழஞ்சி சிவராமன் கூறியதாவது: விவசாய பணிகளுக்கு முன்பு போல் வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விவசாய வேலைகளுக்கு வர மறுக்கின்றனர். விவசாய வேலை தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு கூலியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் விவசாயத்தில் லாபம் பார்க்க முடியவில்லை.
சாதாரண நடவில் ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ விதை நெல் தேவைப்படும். இயந்திரம் மூலம் நடவு செய்தால் 15 கிலோ போதும். இதில் நாற்றுகள் பறிக்கும் செலவும் இல்லை. உரச் செலவும் குறைவு என்பதுடன் பணியும் விரைவாக முடிந்து விடுகிறது.
தண்ணீரை காய்ச்சலும் பாய்ச்சலுமாக குறைந்தளவில் பாய்ச்சினால் போதும். விளைச்சலும் அதிகம் கிடைக்கும் என்பதால், கடந்த 2 ஆண்டுகளாக இயந்திர நடவுக்கு மாறியுள்ளோம் என்றார்.