ADDED : ஆக 05, 2026 03:35 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி போத்தம்பட்டி கண்மாய் 23.29 எக்டேர் பரப்பளவு கொண்டது. அசுவமாநதி, 58 கிராம கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்தப்பகுதியில் நல்லுத்துவேன்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் இக்கண்மாய் கரை வருவதால் அதில் கோழி இறைச்சிக் கழிவுகள், மண்டப கழிவுகள், குப்பை இரவு நேரங்களில் சிலர் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த ஜூலை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், இக்கண்மாயை சீரமைக்க 58 கிராம பாசன விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். சீரமைப்பதுடன் ரோட்டோரம் குப்பை கொட்டுவோரை கண்காணித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று சீரமைப்புக்கு அனுமதி வழங்க சப்கலெக்டர் உத்கர்ஷ்குமர் நீர்வளத்துறை, வனத்துறையினருக்கு பரிந்துரை செய்தார். கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை நீர்வரத்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு பாதிப்பின்றி சீரமைக்க அனுமதி வழங்கினர்.
இதனையடுத்து 58 கிராம கால்வாய் பாசன சங்க விவசாயிகள், போத்தம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி கிராமத்தினர் கண்மாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
