/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்துடைப்பு கூட்டமாகவே நடக்கிறதே குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
/
கண்துடைப்பு கூட்டமாகவே நடக்கிறதே குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
கண்துடைப்பு கூட்டமாகவே நடக்கிறதே குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
கண்துடைப்பு கூட்டமாகவே நடக்கிறதே குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 11, 2025 05:41 AM
திருப்பரங்குன்றம் : 'குறைதீர் கூட்டங்கள் கண்துடைப்பாக நடக்கிறது. எந்த கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கவில்லை' என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் தாசில்தார் கவிதா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் மாரிச்சாமி, சிவராமன், பாண்டி, மகாமுனி, சின்னையா, லட்சுமணன் பேசியதாவது: நிலையூர் பெரிய கண்மாய்க்குள் ஆக்கிரமிப்பை அகற்ற 2019ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை அமல்படுத்தாததால், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. தென்கால் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தார் ரோடு அமைக்கும் பணி தடையின்றி நடக்க கரையில் இருந்து எடுத்த மண்ணின் ஒருபகுதியை கண்மாய் உள்பகுதியில் கொட்டினர். அந்த குவியல் அகற்றப்படாமல் உள்ளது. சேதப்படுத்திய மேட்டுமடை சீரமைக்கப்படவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக விவசாயிகள் வருமானம் இன்றி உள்ளனர்.
மாடக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கோர மடை வாய்க்கால் ஆக்கிரமிக்கப்படுகிறது. மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கின்றனர். திருநகர் - விளாச்சேரி வழியில் உள்ள புளியங்குளம் கண்மாய் சீர்கேடு அடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை தேவை.
அனைத்து கண்மாய்கள், நீர் வரத்து கால்வாய்களை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் கோரிக்கை மனு கொடுக்கிறோம். குறைகளை தெரிவிக்கிறோம். ஆனால் தீர்வு இல்லை. கண்துடைப்பு கூட்டங்களாகவே குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது, என்றனர்.
தாசில்தார் கவிதா, 'நீங்கள் கொடுக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி விடுகிறோம்' என்றார்.