/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எலுமிச்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
எலுமிச்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 24, 2024 05:08 AM
பேரையர்: எலுமிச்சை விலை உயர்வால் பேரையூர் பகுதி எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பேரையூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோரின் முக்கிய தொழில் விவசாயம்.
நுாற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தினமும் வருமானம் தரும் கற்பக விருட்சமாக விவசாயிகள் இப்பயிரை கருதுகின்றனர்.பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர் பகுதிகளில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலை எலுமிச்சை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. ஆனாலும் முன்பு போல் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் சில ஆண்டுகளாக போதுமான விளைச்சல் இல்லை. இதனால் விவசாயிகள் சிரமபட்டனர். தற்போது விளைச்சலும், விலையும் உள்ளதால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ''எலுமிச்சை நல்ல லாபம் தரக்கூடிய விவசாயம், கூலி ஆட்கள் குறைவு. சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.50க்கு விற்றது. தற்போது ரூ.200 விலை போகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சம் பழத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. விளைச்சல் உள்ளதால், தினமும் பறிக்கிறோம். தினமும் பணம் கிடைக்கிறது'' என்றனர்.

