/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உடையும் மின்கம்பங்கள் உயிர் பயத்தில் விவசாயிகள்
/
உடையும் மின்கம்பங்கள் உயிர் பயத்தில் விவசாயிகள்
ADDED : அக் 21, 2024 05:21 AM

கொட்டாம்பட்டி: பரமநாதபுரத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து மின்கம்பங்கள் உடைந்து விழுவதால் விவசாயிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருங்காலக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து பரமநாதபுரம் மற்றும் வையாபுரி கண்மாய்க்கு மின் சப்ளை செல்கிறது.
இப் பகுதியில் ஏராளமான ஏக்கரில் நெல், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பல மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விட்டது.
துருப்பிடித்த கம்பிகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. பல மின் கம்பங்களில் வெடிப்பு ஏற்பட்டு சாயும் நிலையில் உள்ளது.
இப்பகுதியில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று வரும் நிலையில் மின் கம்பங்கள் சாய்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படும். கருங்காலக்குடி துணை மின் நிலையத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
மின்கம்பங்களை மாற்ற தாமதப்படுத்தி விபரீதம் நிகழ்ந்தால், மின்வாரியத் துறை பொறுப்பேற்குமா என்பது விவசாயிகளின் கேள்வி. பருவமழை துவங்கி உள்ளதால் மின்கம்பங்கள் அருகில் சென்றாலே ஷாக் அடிக்கிறது. அக்.13ல் இப் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி கணேசன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மின்வாரியத்துறையினர் இவ்விஷயத்தை அலட்சியம் செய்யாமல் மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. மின்வாரிய அதிகாரிகள், விரைவில் சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படும் என்றனர்.