/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாய் சீரமைப்பு பணியில் விவசாயிகள்
/
கால்வாய் சீரமைப்பு பணியில் விவசாயிகள்
ADDED : அக் 28, 2025 03:56 AM
உசிலம்பட்டி: நீர்வளத்துறையை எதிர்பார்க்காமல் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் விவசாயிகள் 58 கிராம கால்வாயின் கிளைக் கால்வாயை சீரமைத்தனர்.
உசிலம்பட்டியின் நீராதார திட்டமான 58 கிராம கால்வாயில் கடந்தாண்டு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பிரதான கால்வாயில் இருந்து இடதுபுறக் கிளைக்கால்வாய் புதர்மண்டி கிடக்கிறது. உத்தப்பநாயக்கனுார் பாறைப்பட்டி வழியாக கல்லுாத்து, பெருமாள்பட்டி, ரெட்டியபட்டி கடைமடை கண்மாய் அய்யம்பட்டி செல்லும் வழியில் முட்செடிகளுடன், ஊரையொட்டிய பகுதியில் குப்பை கொட்டி பாழாகி கிடக்கிறது.
தற்போது பெய்யும் மழையால் பெரியாறு-வைகையில் உபரிநீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீர் திறக்கும் சூழல் உள்ளது. கால்வாயில் திறக்கும் தண்ணீர் தடையின்றி கண்மாய்களுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் அந்தப்பகுதி மக்கள், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், நஞ்சை புஞ்சை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் சங்கத்தினர், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். நீர்வளத்துறையை எதிர்பார்க்காமல் இயந்திரம் மூலம் முட்செடிகள், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

