ADDED : ஆக 05, 2025 05:20 AM

பாலமேடு: பாலமேடு பகுதியில் நாவல் பழம் சீசன் துவங்கியதால் மரங்களுக்கு சேலையால் வலை கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் மருத்துவ குணம் கொண்ட நாவல் பழம் சீசன் துவங்கி உள்ளது. இப்பழம் உயர்ந்த மரங்களில் விளைகிறது. ஆங்காங்கே தோட்டங்களில் வேலிகளிலும் வளர்க்கப்படுகிறது. இதற்கு தண்ணீர் விட்டு பராமரிப்பதும் கிடையாது. குறைந்தளவில் விவசாய நிலங்களிலும் நாவல் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
கோடை காலம் நிறைவு பெறும்போது நாவல் மரங்களில் பூக்கள் உற்பத்தியாகி காய்கள் பிடிக்கும். ஆனி மாத இறுதியில் இருந்து நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். ஆடி மாதங்களில் அதிவேக காற்று வீசும் போது கனிந்து வரும் பழங்கள் கீழே உதிர்ந்து விழும். அதை சேகரிக்க பலரும் ஆர்வம் காட்டுவர்.
அவ்வாறு விழும் பழங்களை மண்ணில் விழாமல் தடுத்துசேகரிக்க விவசாயிகள் நாவல் மரங்களை சுற்றி சேலையால் வலை கட்டி உள்ளனர். மூன்று கிலோ கூடை பழங்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.300 வரை விற்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை அதிகம் வாங்கி செல்கின்றனர்.

