/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்கால் கண்மாய் நடுமடை பகுதியால் கருகும் நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
/
தென்கால் கண்மாய் நடுமடை பகுதியால் கருகும் நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
தென்கால் கண்மாய் நடுமடை பகுதியால் கருகும் நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
தென்கால் கண்மாய் நடுமடை பகுதியால் கருகும் நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 22, 2025 06:18 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நடுமடைப் பகுதி சேதப்படுத்தப்பட்டதால் தண்ணீர் திறக்க முடியாமல் நெற் பயிர்கள் கருகுகின்றன. உடனடியாக சீரமைத்து தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இக்கண்மாய் நடுமடையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வரையுள்ள 200க்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முன்பு நடுமடையின் ஆரம்ப பகுதியிலிருந்து 500 அடி நீளத்திற்கு கண்மாய்க்குள் இருபுறமும் சிமென்ட் தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. இதனால் மடை வழியாக தண்ணீர் வெளியேறுவதில் சிரமமின்றி இருந்தது.
விவசாயி ராமசாமி, தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் சங்க உறுப்பினர் மாயாண்டி கூறியதாவது: தார் ரோடு பணி நடக்கும்போது கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் இரண்டு மடைகளும் சேதப்படுத்தப்பட்டன.
ஒரு மடை சீரமைக்கப்பட்டு விட்டது. நடுமடைப்பகுதி சீரமைக்கப்படவில்லை. ரோடு பணிகள் நிறைவடைந்தும் இதுவரை சீரமைத்து தரவில்லை. இதுகுறித்து தொடர்ந்து மனு அளித்து வந்தோம்.
தற்போது மடைப்பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததால் தண்ணீரில் மணல் விழுந்து மடை அடைக்கப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் திறக்க முடியவில்லை.
ஒரு முறை மண் சரிவு ஏற்பட்டால் அதை சீரமைக்க 10 நாட்களாவது ஆகிறது. அதற்கும் நாங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு மடை அடைக்கப்படுவதால் கண்மாயில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் அவதியுறுகிறோம்.
எந்த அதிகாரியும் முன்வரவில்லை
பலரது நிலங்களில் நெற்கதிர்கள் பால் பிடித்து வருகின்றன. பலர் நடவு செய்து 30 நாட்களாகிறது. ஏராளமானோர் நெல் நடவு செய்ய நிலங்களை தயார் செய்து உள்ளனர்.
தண்ணீர் திறக்க முடியாததால் நடவு செய்த பயிர்கள் வாடுகின்றன. பால் பிடித்த கதிர்கள் கருகுகின்றன. தற்போது மணல் சரிவு அதிகளவில் ஏற்பட்டு மடை அடைபட்டுவிட்டது.
இரண்டு நாட்களில் மடையை சீரமைத்து தண்ணீர் திறக்கப்படவில்லையெனில் அனைத்து நெற்பயிர்களும் கருகிவிடும். ஏக்கருக்கு ரூ. 30 முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
எங்களது வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண எந்த அதிகாரிகளும் முன் வரவில்லை. இரண்டு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்.
இவ்வாறு கூறினர்.