/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
/
மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 01, 2025 02:15 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார கிராமங்களில் ஆடி 18ல் நெல் விதைப்பு, காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வமின்றி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் வட்டார மானாவாரி பகுதிகளில் வழக்கமாக ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதற்கும், காய்கறிகள் பயிரிடவும் கோடை உழவு செய்வர். இந்தாண்டு மழை துவங்காததால் விவசாயிகள் ஆரம்பகட்ட பணிகளை துவக்க தயக்கம் காட்டுகின்றனர்.
மழை வாய்ப்பு எப்படி விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக வைகாசி இறுதியில் காற்று துவங்கி ஆடிவரை நன்கு வீசும். அதற்கேற்ப பருவ மழை பெய்யும்.
இந்தாண்டு ஆரம்பத்தில் அதிகளவு வீசியது. பின்பு காற்றே இல்லை. இதனால் பருவமழை எந்தளவு பெய்யும் எனத்தெரியவில்லை.
ஆடி 18ல் காய்கறிகள், பயிறு வகைகளை விதைப்போம். பலர் நெல் நாற்று பாவுவர். அதற்காக கோடையில் நிலங்களை உழுது ஆரம்ப கட்ட பணிகளை துவக்குவர். கோடை உழவால் மழைநீரை நிலம் சேமித்து வைக்கும். பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் வெளியேறும். நிலம் பண்பட்டு விளைச்சல் அதிகமாகும்.
கண்மாயில் தண்ணீரில்லை வழக்கமாக ஆனியில் சிறிது மழை பெய்யும். அதனால் கடந்தாண்டு வரை கோடை உழவு செய்து நிலங்களை தயார் செய்தோம். இந்தாண்டு இதுவரை மழை இல்லை. இதனால் உழவு செய்ய முடியவில்லை. வேலை ஆட்கள் பற்றாக்குறை, உரம், மருந்துகளின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு விலை இல்லை என்ற காரணங்களால் நஷ்டம் ஏற்படுகிறது. திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களில் குறைவாக தண்ணீர் உள்ளது. போதிய மழை பெய்து, வைகையில் தண்ணீர் திறந்தால் மட்டுமே சாகுபடி பணிகளை செய்ய முடியும் என்றனர்.