ADDED : பிப் 18, 2026 05:19 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் வீரமுருகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து, தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் கூறுகையில், ''ஆடிப்பட்டத்தில் பயிரிட்ட மக்காச்சோளம் மழையின்றி கருகியது. இதற்கு பயிர் காப்பீடு செய்துள்ளோம். இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. உடனே வழங்க வேண்டும். பேரையூரில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்'' என்றனர்.
மேலுார் தாசில்தார் செந்தாமரை தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாயிகள் கிருஷ்ணன், பழனிச்சாமி, அருண், கதிரேசன் பேசினர்.
மேலுார் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளதால் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். கேசம் பட்டிக்கு பெரியாறு கால்வாய் அமைத்து தர வேண்டும்.
கொட்டாம்பட்டி பாலாற்றில் நீர்வளத்துறை சார்பில் கட்டப்படும் தடுப்பணையால் விவசாயிகளுக்கு பயன்படாது. போர் அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும். குரங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதால் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்றனர்.

