/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிறம்மாறிய முருங்கையால் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
/
நிறம்மாறிய முருங்கையால் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
நிறம்மாறிய முருங்கையால் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
நிறம்மாறிய முருங்கையால் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
ADDED : நவ 04, 2024 05:24 AM

உசிலம்பட்டி: 'மழை காரணமாக முருங்கை காய்கள் நிறம் மாறி காய்ப்பதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது' என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி பகுதியில் செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனுார், உத்தப்பநாயக்கனுார், வெள்ளைமலைப்பட்டி, யு.வாடிப்பட்டி, நக்கலப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் முருங்கை அதிகளவில் சாகுபடியாகிறது.
இப்பகுதியில் தொடர் மழையால் முருங்கை பூக்கள் உதிர்ந்தும், காய்கள் பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறியும் காய்க்கிறது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.80க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.10 வரையே விலையாக கிடைக்கிறது. போதிய வருவாய் கிடைக்காததால், முருங்கைகாய் பறிப்போருக்குக்கூட கூலி கொடுக்க முடியவில்லை.
இடையபட்டி பொற்செல்வன் கூறியதாவது:
உசிலம்பட்டிக்கு வரும் முருங்கை காய்கள் மட்டுமே கூடுதல் மழையால் பழுப்பு நிறமாக வருகிறது. வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு பிற பகுதியில் இருந்து வரும் காய்கள் பச்சை நிறத்துடன் உள்ளதால் அவற்றுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. தற்போதைய மழையால் அடுத்த காய்ப்புக்கு பூத்த பூக்களும் உதிர்ந்து போனதால், சில வாரங்களில் காய்க்கும் அளவும் குறைந்து, வரத்தும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மானாவாரி பகுதிகளில் பல இடங்களில் விவசாயிகள் முருங்கை நடவு செய்துள்ளனர். தீபாவளிக்கு முன்பு கிலோ ரூ. 50 முதல் ரூ.70 வரை விலை போனது. சில தினங்களாக கிலோ ரூ.20 என்ற அளவில்தான் விலை போகிறது. பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் கிடைக்கவில்லை. அதனால் பெரும்பாலான விவசாயிகள் காய்களை பறிக்காமல் விட்டு விட்டனர். பலர் காய்களை மாடுகளுக்கு உணவாக அளிக்கின்றனர்.
நெல்லுக்கு அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்தது போல், காய்கறிகளுக்கும் நிரந்தர விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் காய்கறி விவசாயம் செய்வோர் பிழைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.