ADDED : செப் 03, 2026 07:04 PM
மதுரை: மதுரை கருப்பாயூரணி ஊராட்சியில் ஒருவர் டெங்கு காய்ச்சல், மற்றொருவர் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊராட்சியில் துாய்மைப் பணி முழுவீச்சில் நடந்தது. டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பயன்பாடற்ற பழைய டயர்களை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு பணிகள், குடிநீர் தொட்டிகளில் குளோரினேஷன், கொசு நச்சுப்புகை அடித்தல் பணிகள் நடந்தன. சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், துாய்மை காவலர்கள், துாய்மைப் பணியாளர்கள் பலர் இதில் ஈடுபட்டனர். கிழக்கு ஒன்றிய பி.டி.ஓ., ராஜசேகரன், ஏ.பி.டி.ஓ., சின்னக்கருப்பு, ஊராட்சி செயலர் பால்பாண்டி, சுகாதார ஊக்குனர் செல்வி உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெருங்குடி வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெருங்குடி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் தலைமையில், வட்டார மேற்பார்வையாளர்கள் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் அழகுமலை, வரதராஜன் முன்னிலையில் பணிகளை மேற்கொண்டனர்.
சோழவந்தான் வாடிப்பட்டி, தாமோதரன் பட்டியில் பயன்பாடற்ற டயர்கள் அகற்றும் பணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அஸ்வினி, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர்கள்,களஉதவியாளர்கள், டெங்கு மஸ்துார், ஊராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
