/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வட்டார மருத்துவமனைகளில் 'காய்ச்சல் வார்டு' ; மழைக்கால நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
/
வட்டார மருத்துவமனைகளில் 'காய்ச்சல் வார்டு' ; மழைக்கால நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
வட்டார மருத்துவமனைகளில் 'காய்ச்சல் வார்டு' ; மழைக்கால நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
வட்டார மருத்துவமனைகளில் 'காய்ச்சல் வார்டு' ; மழைக்கால நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 20, 2024 05:35 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் சிவபாலன் உட்பட பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலை, மின்வாரியம், தீயணைப்பு, மருத்துவம் உள்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பருவமழை காலத்தில் வைகைக் கரையோரம் உட்பட வெள்ளப் பாதிப்பு வரும் பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிப்படைவோருக்கு அடைக்கலம், நிவாரணம் வழங்க 50க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மேற்கொள்ள வேண்டியவை குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கியதாவது: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கும் நீரை, மழை பெய்து முடிந்த பத்து நிமிடங்களில் வடிந்துவிடும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாலைகளில் பள்ளம், மேடுகளை இப்போதே சரிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சுகாதாரத் துறையினர் மதுரை அரசு மருத்துவமனை, வட்டார அளவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் 'காய்ச்சல் வார்டு' களை தயாராக வைத்திருக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக தொங்கும் ஒயர்களை மின்வாரியத்தினர் இப்போதே சரிசெய்ய வேண்டும். கால்நடைகளுக்கு மழைக்கால நோய்கள் ஏற்படாதவாறு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்கான படகு, மரம் வெட்டும் கருவிகள், நீச்சல்வீரர்கள், வாகனங்கள், மீட்பு கருவிகளை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை கலெக்டர் தெரிவித்தார்.