/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மாதம் ஐம்பது புதிய எய்ட்ஸ் நோயாளிகள்
/
மதுரையில் மாதம் ஐம்பது புதிய எய்ட்ஸ் நோயாளிகள்
ADDED : மே 12, 2025 05:52 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் 50 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
மதுரை, திருமங்கலம், மேலுார் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனை ஒன்றிலும் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏ.ஆர்.டி., மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. கடந்தாண்டில் மதுரையில் 4604 நோயாளிகளும் திருமங்கலத்தில் 1200, மேலுாரில் 900 நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
2030க்குள் புதிய எய்ட்ஸ் நோயாளிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு. மாவட்டத்தில் மாதந்தோறும் புதிதாக 50 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. புதிய நோயாளிகள் உருவாவதை தடுப்பதே எங்கள் இலக்கு என்கின்றனர் மதுரை அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மருத்துவ மைய திட்ட அலுவலர் டாக்டர் பீர்முகமது மற்றும் சீனியர் டாக்டர் குமுதவள்ளி.
தொடர் கண்காணிப்பு
அவர்கள் கூறியதாவது:
பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் எய்ட்ஸ் பரவுகிறது. சில நேரங்களில் எச்.ஐ.வி., பாசிட்டிவ் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும் போதோ, ஊசி செலுத்தும் போதோ டாக்டர், நர்ஸ்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. அதுபோன்ற நேரங்களில் உடனடியாக நான்கு வாரங்களுக்கு தொடர் மருந்துகள் கொடுத்து கண்காணிக்கிறோம்.
பாசிடிவ் தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் வர வாய்ப்புள்ளது. ஆறு மாதத்திற்கு தொடர் மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கு எய்ட்ஸ் வருவதை 99 சதவீதம் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 42 வது நாளில் எய்ட்ஸ் சிகிச்சைக்கான முதல் மருந்தும், 6 முதல் 12 வாரங்களுக்கு தொடர் மருந்து வழங்கியும் கண்காணிக்கிறோம். 42வது நாள், 2 வது மாதம், 6வது, 12வது, 18வது மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து 'எய்ட்ஸ் நெகடிவ்' என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
கவனம் தேவை
2023 - 24 உடன் ஒப்பிடும் போது 2024 - 2025ல் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளோனோர் எண்ணிக்கை 17 வரை குறைந்துள்ளது. கல்லுாரிகளில் மாணவர்கள் போதை ஊசி மூலம் மாறி மாறி செலுத்தி கொள்ளும் போது எய்ட்ஸ் பரவும் வாய்ப்புள்ளது. கடந்தாண்டு ஒருவருக்கு போதை ஊசி மூலம் எய்ட்ஸ் பாசிடிவ் இருந்தது கண்டறியப்பட்டது. டாட்டூ மையங்களில் செலுத்தப்படும் ஊசியை முறையாக சுத்திகரிப்பு செய்வதை உறுதிசெய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களில் இளைஞர்கள் கவனமாக இருந்தால் எய்ட்ஸ் வராமல் தடுத்து விடலாம். 2030க்குள் புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் தடுப்பதே இலக்கு. பாதுகாப்பான உடலுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இலவச 'காண்டம்' வழங்கி வருகிறோம் என்றனர்.