/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'உணவு ‛பேக்கிங்' 25 கிலோவுக்கு 5 சதவீதம், அதற்கு மேல் வரிவிலக்கு குழப்பும் ஜி.எஸ்.டி., வரிவிகிதம்: புலம்பும் வணிகர்கள்
/
'உணவு ‛பேக்கிங்' 25 கிலோவுக்கு 5 சதவீதம், அதற்கு மேல் வரிவிலக்கு குழப்பும் ஜி.எஸ்.டி., வரிவிகிதம்: புலம்பும் வணிகர்கள்
'உணவு ‛பேக்கிங்' 25 கிலோவுக்கு 5 சதவீதம், அதற்கு மேல் வரிவிலக்கு குழப்பும் ஜி.எஸ்.டி., வரிவிகிதம்: புலம்பும் வணிகர்கள்
'உணவு ‛பேக்கிங்' 25 கிலோவுக்கு 5 சதவீதம், அதற்கு மேல் வரிவிலக்கு குழப்பும் ஜி.எஸ்.டி., வரிவிகிதம்: புலம்பும் வணிகர்கள்
ADDED : செப் 20, 2024 05:33 AM
மதுரை : அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 25 கிலோ வரை 'பேக்கிங்' செய்தால் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. 26 கிலோவுக்கு மேல் 'பேக்கிங்' செய்து விற்றால் வரிவிலக்கு என்பதை மாற்ற வேண்டுமென தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்கப்பட்டவற்றை தவிர்த்து மற்றதற்கு 5 சதவீதம், 12 மற்றும் 18 சதவீத வரி என்ற வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.
அரிசி, பருப்பு, மசாலா பொருட்களுக்கு 5 சதவீத வரி, உடனடி தயார் நிலை உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட மசாலாக்களுக்கு 12 சதவீதம், இட்லி, தோசை மாவு, தயார் நிலை குளிர்பானங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மலிவு விலையில் தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வரிவிலக்கு பெற்றவை தவிர அனைத்தையும் 5 சதவீத வரி விதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் 25 கிலோவுக்குள் மற்றும் 25 கிலோ வரை 'பேக்கிங்' செய்யப்பட்டிருந்தால் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.
26 கிலோவுக்கு மேல் 'பேக்கிங்' செய்து விற்றால் வரி விலக்கு என்பது சில்லரை வணிகர்களை பாதிக்கிறது. 25 கிலோ வரை அடைத்து விற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் வரிவிலக்கு தர வேண்டும்.
தற்போது வேளாண் விதைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு 5 சதவீதம், இவை இல்லாத உரங்களுக்கு 12 சதவீதம், விவசாய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் 5 சதவீத வரியாக குறைத்தால் உணவு உற்பத்தி செலவு குறைந்து நுகர்வோருக்கு உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்க முடியும்.
கடந்த ஜூன் 25ல் டில்லியில் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடந்த பட்ஜெட் முன் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தொழில் வணிக அமைப்புகள், வணிக பிரதிநிதிகளில் 15 பேர் கலந்து கொண்டோம்.
மத்திய நிதித்துறையின் கவனத்திற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இதுகுறித்து கோரிக்கை வைத்தும் பலன் கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி.யில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய வேண்டியது மத்திய அரசு. ஆனால் நடைமுறைப்படுத்துவது ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் என கைகாட்டி ஒதுங்கிக் கொள்வது சரியில்லை என்றார்.