ADDED : ஆக 19, 2026 05:31 PM
சோழவந்தான்: தேனுார் ஊராட்சி தச்சம்பத்தில் ரோட்டோரம் குப்பை குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இங்கு மதுரை மெயின் ரோட்டில் மகளிர் சுகாதார வளாகம் அருகே குப்பை மலை போல் குவிந்துள்ளது. ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை தனியாக அமைக்கப்பட்ட கிடங்கில் கொட்ட வேண்டும். ஆனால் இங்கு வாடிக்கையாக ரோட்டோரத்தில் குவித்து தீ வைத்து எரிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இதே இடத்தில் குப்பையை கொட்டுவதும், தீ வைப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் அந்த இடமே குப்பைக் குன்றாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இவ்வழியே செல்வோர் முகம் சுளிக்கின்றனர். இரை தேடும் நாய்கள் ரோடு முழுவதும் குப்பையை சிதறடிக்கின்றன. அப்போது வாகனங்களில் சிக்கி விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
