ADDED : ஆக 27, 2025 01:03 AM
மதுரை; தமிழக அரசு சமூகநலன், மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் (ஜன.24) விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டும் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட (2024, டிச.31ன் படி) தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் வீரதீர செயல்கள் புரிந்திருப்பின் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு சிறப்பான, தனித்துவ சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகளுக்கு தீர்வு காண ஓவியம், கவிதை, கட்டுரை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருத்தல், ஆண்களைப் போல பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருத்தலுக்கு விருது வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் நவ.10 க்குள் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.