/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்கள்
/
பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்கள்
ADDED : பிப் 13, 2025 05:36 AM
மதுரை: மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் பஸ்கள், வலையங்குளம் உள்ளிட்ட இடைப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களை ஏற்ற மறுப்பதுடன், நடத்துனர்களும் அவமரியாதை செய்வதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் செல்கின்றன. இவற்றில் முக்கிய ஊர்களைத் தவிர்த்து இடைப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் ஏறினால் டிக்கெட் வழங்க மறுக்கின்றனர். அல்லது அவர்களை கடைசியில் ஏறும்படி கட்டளையிடுவதுடன், 'சீட்' காலியாக இருந்தாலும் நின்று கொண்டே பயணிக்கும் படியும் கூறுகின்றனர்.
டிக்கெட் எடுத்து பயணிப்போரை அவமரியாதை செய்வதும் நடக்கிறது. இத்தனைக்கும் வலையங்குளம் போன்ற கிராமப்புற பகுதிகளில் பஸ்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பஸ்ஊழியர்கள் முறைப்புடன் நடந்து கொள்வதாக கூறுகின்றனர்.
பயணி சாந்தி கூறுகையில், ''சென்னையில் இருந்து அதிகாலை வந்தேன். டிக்கெட் பெற்றதும், களைப்பாக இருந்ததால் சீட்டில் அமர்ந்து பயணித்தேன். ஆனால் பஸ் நடத்துனர் அவதுாறு பேசியதுடன், நின்று பயணிக்கும்படி கூறினார். பல ஆண்டுகளாக இந்நிலை உள்ளது.
இதுபோன்ற ஊழியர்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

