ADDED : ஆக 03, 2025 04:01 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கருப்பட்டி உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து 3 ஆண்டு களாக கட்டப்படாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இங்கு பழமையான அரசு உயர்நிலைப்பள்ளி, சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் அருகே அமைந்துள்ளது. கால்வாய் கரையிலேயே பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கால்வாய் முறையாக துார்வாரப்படாதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை உருவானது.
இதனால் சுற்றுச் சுவர் பலமிழந்து இடிந்து விழுந்தது. இதனை தற்போது வரை சீரமைக்காததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கின்றனர். மாணவர்கள் கவனக்குறைவாக கால்வாயில் தவறி விழவும், விபரீதம் விளையவும் அதிக வாய்ப்புள்ளது.
வெள்ள காலங்களில் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்லும். அப்போது பள்ளி வளாகம் முழுவதும் வெள்ள நீர் சூழும் அபாயம் உள்ளது. கால்வாய் பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் செல்லும் நிலையும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.