/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., குறைந்ததால் சிறிய கார்களுக்கு 'ஜாக்பாட்'
/
ஜி.எஸ்.டி., குறைந்ததால் சிறிய கார்களுக்கு 'ஜாக்பாட்'
ஜி.எஸ்.டி., குறைந்ததால் சிறிய கார்களுக்கு 'ஜாக்பாட்'
ஜி.எஸ்.டி., குறைந்ததால் சிறிய கார்களுக்கு 'ஜாக்பாட்'
ADDED : செப் 26, 2025 03:48 AM

டூவீலர்கள் விற்பனை அதிகரிப்பு கார்த்திக் அருண், பங்குதாரர், குணா மோட்டார்ஸ் (யமஹா): டூவீலர்களுக்கு ஜி.எஸ்.டி., வரி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறைந்ததால் யமஹா வாடிக்கையாளர்களுக்கு 11 சதவீத லாபமாக ரூ.8000 ல் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மாடலுக்கேற்ப வரிக்குறைப்பில் மட்டும் கிடைக்கிறது. வரியை கணக்கிட்டே இன்சூரன்ஸ் தொகை, ரோட்டுக்கான வரியும் கணக்கிடப்படும் என்பதால் இதன் மூலம் ரூ.2000 வரை குறைகிறது. டூவீலர் கடன் பெறும் போது ஆரம்ப கட்ட தொகை செலுத்துவதும் குறையும். வரிச்சீரமைப்புக்கு முந்தைய செப். 22 வரை விற்பனை சீராக இருந்தது. வரிகுறைப்புக்கு பின் டூவீலர்கள் குறித்து விசாரிப்போரின் எண்ணிக்கையும் வாங்குவோரின் எண்ணிக்கையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாங்கும் திறன் அதிகரிப்பு சிவகுருநாதன், பொதுமேலாளர், ரமணி கார்ஸ் (ஸ்கோடா): ஸ்கோடா கைலாக் 4 மீட்டர் நீளத்திற்குட்பட்ட கார். ரூ.10 லட்சத்திற்கு உட்பட்ட கார். இதற்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., ஒரு சதவீத செஸ் வரி இருந்தது. இப்போது செஸ் வரி நீக்கப்பட்டு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யாக குறைந்ததால் ரூ.70ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சத்து 19ஆயிரம் வரை காரின் விலையும் குறைந்துள்ளது. ஆரம்ப மாடல் விலையே ரூ.7.54 லட்சம் தான். எனவே விசாரணைகள் அதிகரித்ததுடன் 30 கார்கள் விற்ற நிலையில் 45 கார்கள் 'புக்கிங்' ஆகியுள்ளன.
ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா,கோடியாக் மாடல் கார்கள் 4 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளவை. 28 சதவீத ஜி.எஸ்.டி., 17 சதவீத செஸ் என 45 சதவீதத்தில் இருந்து 40 சதவீத வரியாக குறைந்துள்ளது. 5 சதவீத வரிகுறைப்பை கணக்கிட்டால் ரூ.40ஆயிரம் முதல் ரூ.75ஆயிரம் வரையும் கோடியாக் ரகத்திற்கு ரூ.2 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த கார்கள் மாதம் 10 எண்ணிக்கையில் விற்ற நிலையில் இப்போது 25 கார்கள் விற்பதற்கு வாய்ப்புள்ளது. கோடியாக் ஒரு கார் விற்ற நிலையில் 3 கார்கள் விற்பனையாகின்றன.
வரிகுறைப்பிற்கு பின் 4100 'புக்கிங்' அழகுமுருகன், விற்பனை மேலாளர், ஆசீர் நெக்ஸா: நெக்ஸா நிறுவனத்தில்1500 சி.சி., திறனுக்கு மேற்பட்ட கார்களுக்கான வரி 45 ல் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. பலினோ, இக்னிஸ், ப்ரான்ஸ் ரக கார்கள் 1500 சி.சி., திறனுக்கு குறைவான கார்கள் என்பதால் ரூ.89ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. ரூ.8.4 லட்சத்திற்கு விற்ற பலினோ கார் தற்போது ரூ.7.40 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. ப்ரான்ஸ் கார் ரூ.ஒருலட்சத்து 14ஆயிரம் குறையும். ஆன்ரோடு விலையும் கணிசமாக குறையும். இதனால் புக்கிங் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் வரிகுறைப்பிற்கு பின் செப். 24 வரை 4100 'புக்கிங்' முடிந்துள்ளது. ஆகஸ்டில் இந்தளவு 'புக்கிங்' இல்லை. டிசம்பர் மாதத்தில் தான் இதுபோன்ற 'புக்கிங்' நடக்கும் என்பதால் டிசம்பரிலும் இதை விட கூடுதலாக பிசினஸ் நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கை, வளர்ச்சி அதிகரிப்பு ஜெயமுருகன், விற்பனை மேலாளர், இ.வி.எம்., நிஸான் : நிஸான் நிறுவனத்தில்,'காம்பேக்ட் எஸ்.யூ.வி.,' யான 'மேக்னைட்' மாடல்மட்டுமே விற்பனையில்உள்ளது. ரூ.6.14 லட்சமாக இருந்த அதன் ஆரம்ப விலை தற்போது ரூ.5.61 லட்சமாக குறைந்துள்ளது.
கடந்த மாதத்தை விட 38 சதவீதம் விற்பனை உயரும் என எதிர்ப்பார்க்கிறோம். விசாரிப்பு 20 சதவீதம், முன்பதிவு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு முன் இந்த மாடலில் 'சி.வி.டி.,', 'சி.வி.டி., டர்போ' என 2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தன. வரிகுறைப்பிற்கு பின் சி.வி.டி., வேரியண்ட் மட்டும் ரூ.10 லட்சத்திற்குள் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1.85 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கிடைக்கிறது.
பண்டிகை கால சலுகைகள் தீபாவளி வரை நீட்டிக்கப்படும். அதன் பின் ஆண்டு இறுதி சலுகைகள் டிசம்பர் வரை தொடரும். வரி குறைப்பால் இந்தாண்டு வளர்ச்சி அதிகரித்துள்ளது.
'எக்ஸ்சேஞ்ச்' செய்ய சரியான தருணம் சிராஜ், பொது மேலாளர், சுந்தரம் ஹோண்டா கார்ஸ் : வரி குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு கார்களின் விலை குறைந்துள்ளது. 28ல் இருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.10 லட்சத்திற்கு கீழ் பல வேரியண்டுகள் வந்துள்ளன.
செப்.1 முதலே பண்டிகை கால 'ஆபர்'களை நாங்கள் வழங்கி வருகிறோம். தற்போது வரி குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மேலும் கூடியுள்ளது. ஹோண்டா 'அமேஸ்' மாடலுக்கு ரூ.1.72 லட்சம் வரை, 'எலிவேட்' மாடலுக்கு ரூ.1.80 லட்சம் வரை, 'சிட்டி' மாடலுக்கு ரூ.1.70 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன.பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்ய இதுவே சரியான தருணம்.
கார்களின் விசாரிப்பு, முன்பதிவு 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. முதன்முறையாக கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விற்பனை 15 சதவீதம் அதிகரிப்பு பாண்டிகுமார், உதவி பொது மேலாளர், எம்.ஜி., பி.பி.எஸ்., மோட்டார்ஸ் : ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் எம்.ஜி., கார்களின் விசாரிப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு 25 சதவீதமும், விற்பனை 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதிகம் விற்கும் மாடல்களான 'ஹெக்டர்', 'வின்ட்ஸர் இ.வி.,' மற்றும் 'அஸ்டர்', கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஹெக்டர் மாடலுக்கு ரூ.2 லட்சம் வரை, குளோஸ்டர் மாடலுக்கு ரூ.3.03 லட்சம் வரை, அஸ்டர் மாடலுக்கு ரூ.53 ஆயிரம் வரை சேமிப்பு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.1.07 லட்சம் முதல் ரூ.3.03 லட்சம் வரை வரிக் குறைப்பு பலன்களை பெறலாம்.