ADDED : நவ 15, 2024 06:08 AM

மதுரை: உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக மதுரையை சேர்ந்த 7 வயது சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்தவர் சம்யுக்தா. இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனைக்கு ஒருவர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் சரியாக செய்து காட்ட வேண்டும்.
பிற மாணவர்களுக்கு குறைந்தது 50 மணிநேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும். இதைப் வீடியோவாகப் பதிவு செய்து கின்னஸ் சாதனை குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பதிவு கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும்.
இவ்வகையில் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகக் குறைந்த வயதில் கச்சிதமாக செய்து காட்டியுள்ளார் மதுரை சம்யுக்தா. இவரது வயது 7 மற்றும் 270 நாட்கள். இந்த வயதில் அவரிடம் கேட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் செய்துகாட்டி சாதித்துள்ளார். இதனால் கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் உலகிலேயே இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் என்ற பட்டத்தைப் பெற்றார். சாதனைச் சிறுமி சம்யுக்தாவை மதுரை டேக்வாண்டோ அகாடமி தலைமைப் பயிற்சியாளர் நாராயணன் பாராட்டினார்.