/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாண்டியன் ரயிலுக்கு நேற்று ஹேப்பி பர்த்டே
/
பாண்டியன் ரயிலுக்கு நேற்று ஹேப்பி பர்த்டே
ADDED : அக் 02, 2025 03:35 AM
மதுரை : மதுரையின் பெருமைகளுள் ஒன்றான பாண்டியன் சூப்பர் பாஸ்ட் ரயில், நேற்றுடன் 56 வயதை பூர்த்தி செய்தது.
மதுரை - சென்னை எழும்பூர் இடையே 1969 அக். 1ல் மீட்டர் கேஜ் பாதையில், 2 நீராவி இன்ஜின்களுடன்இயங்கும் வகையில் 'பாண்டியன்' ரயில் துவங்கப்பட்டது. ஒரு ராஜ்ஜியத்தின் பெயரை இந்திய ரயிலுக்கு சூட்டப்பட்டது இதுவே முதல் முறை. அப்போதைய பயண நேரம் 11:45 மணி நேரமாக இருந்தது.
டீசலுக்கு மாற்றம் 1973ல் நீராவி இன்ஜின்களுக்கு பதிலாக டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டது. 1998ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின் 10 மணி நேரத்தில் இலக்கை சென்றடைந்தது. 2002ல் திருச்சி பொன்மலையின் 2 டீசல் இன்ஜின்களை கொண்டு 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக இயக்கப்பட்டது.
2006ல் பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தின் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 9 மணி நேரமாக பயண நேரம் குறைக்கப்பட்டது.2014 முதல் முழுமையாக மின் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
ஹனிமூன் எக்ஸ்பிரஸ் 2015 ஆகஸ்ட் முதல் மின் இன்ஜின்களின் ராஜாவான 'டபிள்யு.ஏ.பி. 7' வகை இன்ஜினுடன், பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயக்கப்பட்ட முதல் ரயில் இதுவாகும். 2018ல் இருவழிப் பாதை பணிகள் நிறைவுற்று 8 மணி நேரமாக பயண நேரம் குறைக்கப்பட்டது. 2019ல் மதுரை - திண்டுக்கல் இடையே 110 கி.மீ., ஆக வேகம் அதிகரிக்கப்பட்டு 7:45 மணி நேரமாக பயண நேரம் குறைக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே எழும்பூர் கோட்டத்தில் முதல் வகுப்பு 'ஏசி' பெட்டிகள் சேர்க்கப்பட்டது இந்த ரயிலில் தான். இதற்கு 'ஹனிமூன் எக்ஸ்பிரஸ்' என்ற செல்ல பெயரும் உண்டு. கடந்த 56 ஆண்டுகளாக 'கார்ட் லைனின்' (திருச்சி - விருத்தாச்சலம் - விழுப்புரம்) மஹா ராஜாவாக திகழும் இந்த ரயில், நேற்று 57வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.