ADDED : ஜன 07, 2026 06:39 AM
மதுரை: தமிழகத்தில் ஜன.9 முதல் 11 வரை மழை இருப்பதாக வானிலை முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முதிர்ச்சியடைந்த நெற்கதிர்களை தாமதிக்காமல் விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக 53ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் எக்டேர் பரப்பில் உள்ள நெற்கதிர்கள் முதிர்ச்சி நிலையில் உள்ளன. தமிழகத்தில் ஜன. 9 முதல் 11 வரை மழை இருப்பதாக வானிலை முன் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளர்ச்சி நிலையில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் வயலில் சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும். உரமிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஜன. 10 முதல் 13 ம் தேதிக்குள் அறுவடை செய்ய வேண்டிய நெல்லை உடனடியாக அறுவடை செய்வது நல்லது. நெல் அறுவடை இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளன. நெற்கதிர்களை குவித்து அம்பாரமாக்கி தார்ப்பாலின் சீட்டால் மூடி மழைநீர் புகாமல் பாதுகாக்கலாம்.
மதுரையில் உரத்திற்கு தட்டுப்பாடில்லை. யூரியா 2350 டன், டி.ஏ.பி., 750 டன், பொட்டாஷ் 655டன், காம்ப்ளக்ஸ் 3200 டன் இருப்பு உள்ளது என்றார்.

