ADDED : ஆக 31, 2026 01:21 AM
சோழவந்தான்: குருவித்துறையில் பராமரிப்பின்றி சிதைந்து வரும் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே ரூ.பல லட்சம் செலவில் 20க்கும் மேற்பட்ட கழிவறைகளுடன் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் பராமரிப்பின்றி 'பைப்'புகள் உடைந்ததால் கைவிடப்பட்டது.
இதன்பின் வளாகம் முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறிவிட்டது. கதவுகள் துருப்பிடித்து சேதமடைந்தன. நாய்கள், விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியது.
மனிதர்கள் நுழைய முடியாத வகையில் மாறியதால், தற்போது பெண்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். தற்போதும் கட்டடம் நல்ல நிலையில் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
