/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொலை வழக்கில் துாக்கு தண்டனை; மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
/
கொலை வழக்கில் துாக்கு தண்டனை; மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
கொலை வழக்கில் துாக்கு தண்டனை; மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
கொலை வழக்கில் துாக்கு தண்டனை; மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
ADDED : அக் 28, 2025 11:33 PM
மதுரை: திருநெல்வேலியில் ரவுடி வைகுண்டம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் ஒருவருக்கு துாக்கு தண்டனை, 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
திருநெல்வேலி அருகே பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வைகுண்டம் 45. இவர் ஊராட்சி தேர்தல் தொடர்பான மோதல், ஒரே சமூகத்தினர் இடையே நடந்த கொலை, வெட்டு, குத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தார்.
இவர் தொடர்புடைய ஒரு வழக்கில் 2022 மார்ச் 10 ல் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி கூற இருந்தார். அவர் சாட்சி கூறினால் வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என திட்டமிட்ட சிலர், அன்று காலை அவர் அங்குள்ள கால்வாயில் குளிக்கச் சென்றபோது வெட்டிக் கொலை செய்தனர். திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். இரு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அந்நீதிமன்றம் 2025 மார்ச்சில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செல்வராஜுக்கு துாக்கு தண்டனை விதித்தது. அந்தோணிராஜ், அருள் பிலிப், ஆண்டோ, பாபு அலெக்சாண்டருக்கு தலா ஆயுள் தண்டனை, ராஜன், செல்வ லீலா, ஜாக்குலினுக்கு தலா 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.
கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கும்பட்சத்தில் அதை உறுதி செய்ய பரிசீலிப்பதற்காக ஆவணங்களை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி இவ்வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.
செல்வராஜ், அந்தோணிராஜ், அருள் பிலிப் உள்ளிட்ட 8 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கதிர்வேலு, வழக்கறிஞர்கள் பிரபு, பாசில், கார்த்திக், மனோஜ்குமார் ஆஜராயினர்.
விசாரணையை நீதிபதிகள் நவ., 4 க்கு ஒத்திவைத்தனர்.

