/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முறையான நிர்வாகம் இன்றி நஷ்டத்தில் போக்குவரத்துக்கழகம் உயர்நீதிமன்றம் கருத்து
/
முறையான நிர்வாகம் இன்றி நஷ்டத்தில் போக்குவரத்துக்கழகம் உயர்நீதிமன்றம் கருத்து
முறையான நிர்வாகம் இன்றி நஷ்டத்தில் போக்குவரத்துக்கழகம் உயர்நீதிமன்றம் கருத்து
முறையான நிர்வாகம் இன்றி நஷ்டத்தில் போக்குவரத்துக்கழகம் உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : நவ 05, 2025 12:45 AM
மதுரை: முறையான நிர்வாகம், பொறுப்புணர்வு இல்லாததால் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என கருத்து பதிவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்த திருநெல்வேலி போக்குவரத்துக் கழக நிர்வாக மனுவை தள்ளுபடி செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மாடசாமி. இவர் 2005 மே 1 ல் தென்காசியிலிருந்து நாகர்கோவிலுக்கு பஸ் ஓட்டிச் சென்றார். ஆரல்வாய்மொழி அருகே எதிரே வந்த ஒரு வாகனம் மீது பஸ் மோதியது. அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சஸ்பெண்ட் காலம் தண்டனையாக கருதப்பட்டது. தண்டனைக்கு எதிராக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் 2013 ல் வழக்கு தாக்கல் செய்தது.
போக்குவரத்துக் கழக நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்யத் தவறியது. விசாரணையின்போது நிர்வாகம் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. சங்க தரப்பிற்கு ஆதரவாக (எக்ஸ்பார்ட்டி) தொழிலாளர் நீதிமன்றம் 2013 மார்ச் 15 ல் உத்தரவிட்டது.
அதை ரத்து செய்யக்கோரி போக்குவரத்துக் கழகம் 2016 ல் மனு செய்தது. அதை அந்நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி. புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: வேலைப்பளு காரணமாக மனு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
சங்கம் தரப்பு: விபத்திற்காக மாடசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவில்லை; கவனக்குறைவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்குரிய ஆவணம் எதுவும் இல்லை.அவருக்கு எதிராக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டனை விதித்துள்ளது.
மாடசாமியை துன்புறுத்துவதற்காக பழிவாங்கும் நோக்கில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்துக் கழகம் சட்டப் பிரிவில் ஒரு பட்டாலியனை' கொண்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்துக் கழக நிர்வாகமும் தொழிலாளர் நீதிமன்றத்தில் 2 முதல் 3 வழக்கறிஞர்களை கொண்டுள்ளது. இருப்பினும் 2013 ல் 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவு பிறப்பிக்க போக்குவரத்துக் கழகம் அனுமதித்துள்ளது.
அதை ரத்து செய்ய கீழமை நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டு முறை திருப்பி அனுப்பிய பின், 2016 ல் ஏற்கப்பட்டு எண்ணிடப்பட்டது. தாமதத்திற்குரிய காரணங்களில் திருப்தி அடையாத அந்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. இவ்வழக்கின் உண்மை நிலவரம், சூழ்நிலைகள்கூட, அதன் நிர்வாகம் செயல்படும் விதத்தை வெளிப்படுத்துகிறது. முறையான நிர்வாகம், பொறுப்புணர்வு இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தேவையின்றி வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்த்து, பொறுப்புடன் நடக்கும் வகையில் அதிகாரிகளை உணர வைக்கும் என நம்புகிறேன்.
தொகையை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு மனுதாரர் செலுத்த வேண்டும். தொகையை குறைபாடுகளுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து மனுதாரர் வசூலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

