/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆதார் சேவா கேந்திரா உயர்நீதிமன்றம் நம்பிக்கை
/
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆதார் சேவா கேந்திரா உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆதார் சேவா கேந்திரா உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆதார் சேவா கேந்திரா உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ADDED : நவ 01, 2025 03:23 AM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடி புஷ்பம் 74, தாக்கல் செய்த மனு: எனது கணவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அவருக்கு ராணுவ ஓய்வூதியம் கிடைத்தது. 2025 மே 23 ல் இறந்தார். ஓய்வூதிய கணக்கை எனது பெயரில் மாற்ற விண்ணப்பித்தேன். ஆதாரில் எனது பெயரிலுள்ள ஒரு எழுத்தில் மற்றும் பிறந்த தேதியில் தவறு உள்ளது. சரி செய்ய பரமக்குடியிலுள்ள இ-சேவை மையத்தை அணுகினேன். திருத்தங்கள் செய்ய தபால் நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. பெங்களூருவிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பதில் இல்லை. ஆதாரில் பிழைகளை சரி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காமேஷ், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஞானகுருநாதன் ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் ஒரு மூத்த குடிமகன். அவரது வழக்கு சிறந்த உதாரணம். அவரது கணவர் இறந்ததால் குடும்ப ஓய்வூதியம் மனுதாரருக்கு அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், ஓய்வூதியக் கணக்கில் மாற்றம் செய்யவில்லை. அதற்கு ஒரே காரணம் அவரது ஆதாரில் உள்ள முரண்பாடுதான்.
அடுத்ததாக எழும் கேள்வி மனுதாரர் யாரை அணுக வேண்டும் என்பதுதான். மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்,'மனுதாரர் மதுரையிலுள்ள ஆதார் சேவா கேந்திராவில் ஆஜராக வேண்டும்,' என்றார்.
வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த பலர்,'தமிழகத்தின் தென்மாவட்டங்கள் அனைத்திற்கும் ஒரே ஒரு ஆதார் சேவா கேந்திரா மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ளது, 'என தனிப்பட்ட அனுபவங்களை தெரிவித்தனர். ஒருவரின் முகவரி மற்றும் அலைபேசி எண் விபரங்களை சரிசெய்வது போன்ற சில மாற்றங்களை உள்ளூர் மட்டத்தில் செய்ய முடியும் என தெரிகிறது.
பெயர், பிறந்த தேதி மற்றும் பயோமெட்ரிக் தகவல்களில் மாற்றங்கள் மதுரை ஆதார் சேவா கேந்திராவில் மட்டுமே செய்ய முடியும். இக்கருத்து சரியானது. இம்மையத்தில் தினமும் அதிகாலை முதல் நீண்ட வரிசைகள் இருப்பது உண்மை. மனுதாரர் பரமக்குடியில் வசிப்பவர். அவரது ஆதாரிலுள்ள தகவல்களை மாற்றுவதற்கான உரிமையை நிறைவேற்ற மதுரை வரை வருமாறு ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பயோமெட்ரிக் தகவல்களை மாற்ற, ஒருவர் நேரில் ஆஜராவது தேவைப்படலாம். மக்களின் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை மாற்றுவதற்கான வசதி உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் 4056 ஆதார் பதிவு மையங்கள் உள்ளன. சட்டப்படி தகவல்களில் மாற்றம் செய்யும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இவற்றை மேம்படுத்தலாம்.
தமிழகம் முழுவதும் 2026 மார்ச்சிற்குள் 28 ஆதார் சேவா கேந்திரா (ஏ.எஸ்.கே.,)நிறுவ யு.ஐ.டி.ஏ.ஐ.,திட்டமிட்டுள்ளது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இத்திட்டம் பலனளிக்கும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு மையம் அமையும் என நம்புகிறேன்.
இன்னும் 6 மாதங்களுக்குள் பல ஆதார் சேவா கேந்திரா நிறுவப்படும் என யு.ஐ.டி.ஏ.ஐ., நம்பிக்கை கொண்டாலும், அதுவரை மனுதாரர் காத்திருக்க முடியாது. அவர் அவசியம் மதுரை ஆதார் சேவா கேந்திராவில் ஆஜராக வேண்டும். மனுதாரரின் ஆதாரில் தேவையான மாற்றம் செய்யப்படும். பின் ஓய்வூதியக் கணக்கை மனுதாரருக்கு சாதகமாக பாதுகாப்புத்துறையின் கணக்கு (ஓய்வூதியம்) அலுவலக முதன்மை கட்டுப்பாட்டாளர் மாற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

