/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் படிப்பு கவுன்சிலிங்குடன் ஆயுஷ் கவுன்சிலிங் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
தொழில் படிப்பு கவுன்சிலிங்குடன் ஆயுஷ் கவுன்சிலிங் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தொழில் படிப்பு கவுன்சிலிங்குடன் ஆயுஷ் கவுன்சிலிங் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தொழில் படிப்பு கவுன்சிலிங்குடன் ஆயுஷ் கவுன்சிலிங் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூலை 06, 2025 06:18 AM
மதுரை: அனைத்து தொழில் படிப்புகளுடன் சேர்த்து ஆயுஷ் படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சிலிங் நடத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அப்பு நடேசன் தாக்கல் செய்த மனு: அனைத்து தொழில் படிப்புகளுடன் சேர்த்து ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சிலிங் நடத்த தமிழக சுகாதாரத்துறை செயலர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: ஆயுஷ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., மற்றும் பொறியியல் படிப்புகளுடன் சேர்த்து நடத்தப்படுவதில்லை. இதனால் ஆயுஷ் படிப்புகளை வழங்கும் கல்லுாரிகள் பாதிக்கப்படுகின்றன.
அரசு பிளீடர் திலக்குமார்: மனுதாரர் 5 நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவற்றில் ஒன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லுாரி. தகுதி, மதிப்பெண் அடிப்படையில் முதலில் எம்.பி.பி.எஸ்.,அதைத் தொடர்ந்து பி.டி.எஸ்., பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பின், பிற படிப்புகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களிடையே உள்ள தேவையின் அடிப்படையில் இது நடத்தப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தேவை அடிப்படையில் கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்படும்போது, ஆயுஷ் படிப்பிற்கான கவுன்சிலிங்கை எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்குடன் சேர்த்து நடத்த வேண்டும் என மனுதாரர் கோர முடியாது. தகுதியான அதிக மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்கின்றனர். எனவே அதில் மாணவர் சேர்க்கைக்கு முதலில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இருப்பினும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கவுன்சிலிங்கை இணைந்து நடத்துவது மாணவர்களுக்கு பலன் தரும் என்கிறார். இது தொடர்பாக மனுதாரர் அரசை அணுக உரிமை உண்டு. மனுதாரர் சட்டப்பூர்வமாக எதையும் நிறுவாததால், அத்தகைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.