/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புது டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஆக 05, 2025 04:49 AM
மதுரை : தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆக.,31ல் பணி ஓய்வு பெறுவதால், அப்பணியிடத்திற்கு வேறொருவரை தேர்வு செய்ய தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வழக்கறிஞர் யாசர் அராபத் தாக்கல் செய்த பொதுநல மனு:
டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆக., 31ல் பணி ஓய்வு பெறுகிறார். அப்பதவியில் நியமனம் மேற்கொள்ள வேறொருவரை தேர்வு செய்வதற்கு தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு 3 மாதங்களுக்கு முன் பரிந்துரைத்திருக்க வேண்டும். தற்போதுவரை பட்டியலை அனுப்பவில்லை. சங்கர் ஜிவால் பணி நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது ஒருவரை பொறுப்பு டி.ஜி.பி., ஆக நியமிக்க வாய்ப்புள்ளது. அது உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 ல் நடைபெற உள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை டி.ஜி.பி., பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. ஆணவக்கொலை, குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட டி.ஜி.பி., நியமனத்தை முறையாக மேற்கொள்வது அவசியம்.
சங்கர் ஜிவாலுக்கு பணி நீட்டிப்பு செய்ய அல்லது பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்க தடை விதிக்க வேண்டும். டி.ஜி.பி.,பதவிக்கு தகுதியான ஐ.பி.எஸ்.,அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ்வரன் ஆஜரானார்.
நீதிபதிகள்: உச்சநீதிமன்றம், 'பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்கக்கூடாது. காவல்துறை அதிகாரிகளில் பணி மூப்பு உள்ளவர்களுக்கே டி.ஜி.பி., நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பின்பற்றுவதில்லை.
டி.ஜி.பி., நியமனத்தில் எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். முரண்பாடு, முறைகேடு புகார் இருப்பின் நீதிமன்றம் தலையிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
நீதிபதிகள் மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆக., 11 க்கு ஒத்திவைத்தனர்.