/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.எஸ்.ஐ.,யிடம் காலி நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
/
சி.எஸ்.ஐ.,யிடம் காலி நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
சி.எஸ்.ஐ.,யிடம் காலி நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
சி.எஸ்.ஐ.,யிடம் காலி நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 29, 2025 05:44 AM
மதுரை: மதுரை சி.எஸ்.ஐ., ஒப்படைவு நிலம் விவகாரத்தில், காலியாக உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தலாம் என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
மதுரை, தல்லாகுளத்தில், வருவாய் துறையால், 1912ல் வழங்கப்பட்ட, 31.1 ஏக்கர் ஒப்படைவு நிலத்தில், சில சொத்துக்களை விற்க மதுரை - ராமநாதபுரம் திருமண்டல - சி.எஸ்.ஐ., நிர்வாகம் 2006ல் தீர்மானித்தது.
இதன்படி, 2008ல் ஐ.ஐ.எப்.எல்., பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம், 6.74 ஏக்கர் நிலத்தை வாங்கி, ஷிரயன்ஸ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து இரு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்றது.
அதில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில், நிபந்தனை மீறப்பட்டதாகவும், நிலத்தை ஒப்படைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தேவசகாயம் என்பவர் தமிழக நில நிர்வாக கமிஷனரிடம் புகார் செய்தார்.
அரசு நிலத்தை விதிகளை மீறி மூன்றாம் தரப்பிற்கு சி.எஸ்.ஐ., நிர்வாகம் மாற்றியதாகவும், நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும், 2022ல் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நில நிர்வாக கமிஷனர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நில நிர்வாக கமிஷனர், நில ஒப்படைவு உத்தரவை, 2024ல் ரத்து செய்தார். எதிர்த்து, ஐ.ஐ.எப்.எல்., பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம், ஷிரயன்ஸ் பவுண்டேஷன், சி.எஸ்.ஐ., மதுரை ராமநாதபுரம் திருமண்டலம் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தனி நீதிபதி பி.பி.பாலாஜி, நில நிர்வாக கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்து நில நிர்வாக கமிஷனர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட நிலத்திலுள்ள பள்ளி, குடியிருப்பு பிளாட்களை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது.
காலியாக உள்ள இடத்தை பொறுத்தவரை, அரசு கையகப்படுத்தி பொது நோக்கத்திற்கு பயன்படுத்தலாம். வணிக வளாகத்திலுள்ள கடைக்காரர்கள் வாடகை தொகையை செலுத்த தனி வங்கி கணக்கை கலெக்டர் துவக்க வேண்டும்.
தற்போதைய சந்தை மதிப்பிற்கேற்ப வாடகை தொகையை கலெக்டர் உயர்த்திக் கொள்ளலாம். சி.எஸ்.ஐ., மதுரை ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

