/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 29, 2025 01:35 AM
மதுரை: மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் செயல்படும் கண்காணிப்புக்குழுக்கள் அனுமதியற்ற கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பு புகார்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மயில்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு: விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க அரசாணை வெளியிட ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை 2024 மார்ச் 1 ல் அரசாணை வெளியிட்டது. கண்காணிப்புக்குழு அமைக்கவில்லை. இதனால் விதிமீறல், அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரீசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.
அரசு பிளீடர் திலக்குமார்: மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கண்காணிப்புக்குழுக்கள் அவ்வப்போது கூட்டம் நடத்த வேண்டும். அதன் முடிவுகள் குறித்த அறிக்கையை மாநில உயர்நிலை கண்காணிப்புக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பு புகார்களை பரிசீலித்து குறித்த காலவரம்பிற்குள் கலெக்டர்கள் தலைமையிலான கண்காணிப்புக்குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

