/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை வசதி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை வசதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை வசதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை வசதி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 17, 2025 06:28 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவை துவக்க நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை எஸ்.ஆர்.டிரஸ்ட் தலைவர் குருசங்கர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தரமாக இருக்கும் வகையில் மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
மதுரை மற்றும் பிற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகுதியான டாக்டர்களை கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (பி.எம்.டி.,) மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மதுரை வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: எலும்பு மஜ்ஜை செயலிழப்பு நோயால் ரத்த அணுக்கள் குறையும். அடிக்கடி ரத்தம் ஏற்ற வேண்டும். நோய் தொற்று, ரத்தக் கசிவு பாதிப்பு ஏற்படும். மீண்டும் எலும்பு மஜ்ஜை செயல்பட வேண்டுமெனில் மாற்று அறுவை சிகிச்சை தேவை. இது ரத்தப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள், மரபணு பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவசியம்.
இதற்கான சிகிச்சைப் பிரிவு சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 2018 ல் துவக்கப்பட்டது. தென்மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் அங்கு சென்றுவருவதில் சிரமம் உள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவை துவக்கினால் தென்மாவட்ட நோயாளிகள் பயனடைவர் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு:
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வசதியை (பி.எம்.டி.,) ஏற்படுத்துவதற்குரிய சிவில் கட்டமைப்பு, உபகரணங்கள் நிறுவ மற்றும் அலுவலர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நிதியை 3 மாதங்களில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அங்கு பி.எம்.டி.,வசதி நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரம் தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க மனுதாரர்கள் சுகாதாரத்துறை முதன்மைச் செயலரிடம் மனு அளிக்கலாம். அதை அவர் சட்டப்படி பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.