/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையே ஒருங்கிணைப்பு தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையே ஒருங்கிணைப்பு தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையே ஒருங்கிணைப்பு தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையே ஒருங்கிணைப்பு தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 09, 2025 05:11 AM
மதுரை: அதிக மதிப்புள்ள நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையிலான ஒருங்கிணைப்பை நிர்வாக ரீதியாக மறு சீராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி ஸ்டேட் வங்கி சிறுதொழில் கிளை உதவி பொதுமேலாளர் வித்யாசர் தாக்கல் செய்த மனு:
ஒரு தனியார் நிறுவனம் வங்கியில் ரூ.13.11 கோடி கடன் பெற்றது. துாத்துக்குடி மாநகராட்சியால் வழங்கியதாகக் கூறப்படும் தகவல் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,)பதில் மூலம் ஆவணங்களை பிணையமாக நிறுவனம் சமர்ப்பித்தது.தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆவணம் மோசடியானது. சில அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து மோசடியாக ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.சி.பி.ஐ.,க்கு 2022 ல் புகார் அனுப்பினோம்.
மற்றொரு தனியார் நிறுவனம் ரூ.3.84 கோடி பெற்றது. அது பிணையமாக அடமானம் வைத்த சொத்து கற்பனையானது. அடமானம் வைத்தவர்களுக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. வங்கிக்கு இழப்பு ரூ.3.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023 ல் சி.பி.ஐ.,க்கு புகார் அனுப்பினோம். இரு புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் திலீப்குமார் ஆஜரானார்.
சி.பி.ஐ.,தரப்பு: மாநில அரசின் ஒப்புதலைப் பெறாததால், வழக்கு பதிவு செய்ய இயலாது.
தமிழக அரசு தரப்பு: சி.பி.ஐ.,விசாரணைக்கு அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர சி.பி.ஐ.,யை எதுவும் தடுக்கவில்லை.
சி.பி.ஐ.,தரப்பு: அடையாளம் தெரிந்த சிலருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அது பெயர் தெரியாத பொது ஊழியர்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுப்பதை தடுக்கிறது. வழக்கு பதிந்து விசாரணையை தொடர முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: டில்லி சிறப்பு போலீஸ் சட்டப்படி மாநில அரசிடமிருந்து சி.பி.ஐ., குறிப்பிட்ட ஒப்புதலைப் பெற வேண்டும். விசாரணையை துவங்க சி.பி.ஐ.,தயங்குவதற்கு காரணம், பெயர் குறிப்பிடப்படாத குற்றம் சாட்டப்பட்ட பொது ஊழியர்களை எவ்வாறு கையாள்வது என்பது அதன் கவலையாக இருக்கலாம்.
ஒப்புதல் மற்றும் அனுமதிக்கு இடையிலான வேறுபாடு தெளிவாகிறது. அனுமதி வழங்கும்போது, வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் உள்ளதா மற்றும் உள்நோக்குடன் வழக்கு தொடரப்படுகிறதா என்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மனதை செலுத்த வேண்டும்.
வேறுபாட்டை புரிந்து கொண்டு, ஒப்புதல் வழங்குவதில் மாநில அரசு தலையிடுவதில் எந்த நியாயமும் இல்லை என்பதுதெளிவாகிறது.
ஒப்புதல் வழங்கியதும் விசாரணையின்போது குற்றத்துடன் தொடர்புடைய ஒரு புது நபரை- பொது ஊழியர் அல்லது தனிநபரை கண்டறியும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக சி.பி.ஐ.,ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., துாங்குவதற்கு பதிலாக மேலும் முன்னேறி அரசிடம் விளக்கம் கோரியிருக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் மாநில அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. சட்டப்பிரிவின்படி குறிப்பிட்ட ஒப்புதல் தேவை என்பது கூட்டாட்சியை பாதுகாக்கவே உள்ளது. பொருளாதார குற்றவாளிகளுக்கு அரசியல் கேடயத்தை வழங்குவதற்காக அல்ல. ஒப்புதலை தானாக முன்வந்து வழங்கவில்லை. மனுதாரர் இந்நீதிமன்றத்தை அணுகியபின்தான் வழங்கப்பட்டது. பொது நிதி சம்பந்தப்பட்ட மோசடி விவகாரத்தில்கூட நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசின் தயக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒப்புதல் வழங்கியதும் எப்படி அல்லது யாரை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட அரசுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்வது விசாரணையில் தலையிடுவதற்கு சமம்.
சி.பி.ஐ.,சரியாக நடந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட ஒப்புதல் (வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும் கூட) பெற்ற போதிலும், வழக்கு பதிவு செய்யவோ அல்லது விசாரணையை துவங்கவோ சி.பி.ஐ., தவறிவிட்டது. புகார்களை மனுதாரருக்கு திருப்பி அனுப்பியது. வழக்கு பதிந்து ஆரம்பகட்ட விசாரணையை துவங்க மறுப்பது அதன் சட்டப்பூர்வ கடமையிலிருந்து விலகுவதை பிரதிபலிக்கிறது. அதன் செயலற்ற தன்மையால் மக்களின் நம்பிக்கை சிதைகிறது.
சி.பி.ஐ.,விசாரணைக்கான பொது ஒப்புதலை 2023ல் தமிழக அரசு திரும்ப பெற்றது.
இதனால் டில்லி சிறப்பு காவல் சட்டப்படி மாநில அரசிடமிருந்து சி.பி.ஐ.,ஒப்புதல் பெற வேண்டும். மாநில அரசின் ஒப்புதலில் பொது ஊழியர்கள், தனிநபர்கள் குறித்து எதுவும் கூறப்படாததால் ஒப்புதல் வழங்கி 3 ஆண்டுகளாகியும் விசாரணை நடைபெறவில்லை. இவ்விவகாரத்தில் மாநில அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. விசாரணை துவங்குவதற்கு முன்பே வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றி சி.பி.ஐ.,அறிந்திருக்கும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது.
அரசு, சி.பி.ஐ.,யின் அலட்சியம் மற்றும் ஒத்துழைப்பு இல்லாதது நீதியின் நோக்கத்தை தடம்புரளச் செய்கிறது. இதை நிர்வாக குறைபாடாக கருத முடியாது. பொறுப்புகளிலிருந்து தவறுவதாகும்.
நீதி தாமதத்திற்கு சிக்கலான நடைமுறைகள் மட்டும் காரணம் அல்ல. இரு துறைகளின் ஈகோ மற்றும் அரசியல் காரணங்களாலும் நீதி தாமதமாகிறது. இத்தகைய செயல்பாட்டை அமைதியாக நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
இவ்வழக்கில் அரசு, சி.பி.ஐ.,நடந்து கொண்ட விதம் மூலம் நீதி எவ்வாறு தாமதமாகிறது என்பதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைகிறது. மாநில, மத்திய அரசின் நிறுவனங்களின் ஒத்துழைப்பு என்பது ஒரு கடமையாக இல்லாமல் ஒரு சலுகை என நடந்து கொள்ளும்போது, நியாயமான விசாரணை என்ற எண்ணமே சரிந்துவிடும்.
சி.பி.ஐ.,மற்றும் மாநில அரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வசதி, ஆறுதல் அல்லது அரசியல் நோக்கத்திற்காக நடந்து கொள்ளக்கூடாது.
பொதுத்துறை வங்கியிலிருந்து புகார் வந்து, மாநில அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அந்த ஒப்புதல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமானதாக இருந்தாலும் தாமதம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்க வேண்டும். நடைமுறை தாமதங்களை மறுபரிசீலனை செய்து இனிமேல் இதுபோல் நடைபெறாமல் இருக்க தலைமை செயலர், சி.பி.ஐ.,இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும். அதே குற்றத்துடன் தொடர்புடைய பொது ஊழியர்கள், தனி நபர்கள் மீது சி.பி.ஐ.,சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். குற்றத்தில் தொடர்புடையவர்கள் மாநில அரசின் பொது ஊழியர்களாக இருந்தால் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும்.
அதிக மதிப்புள்ள நிதி மோசடி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மாநில அரசு, சி.பி.ஐ., இடையிலான ஒருங்கிணைப்பை நிர்வாக ரீதியாக மறு சீராய்வு செய்ய தமிழக தலைமைச் செயலர், மத்திய உள்துறை செயலர், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.