/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலை அரசு கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலை அரசு கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலை அரசு கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலை அரசு கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 07, 2025 11:37 PM
மதுரை: திருச்சியில் குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்ற எஸ்.ஆர்.எம்.,ஓட்டல் வளாகத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது.
திருச்சி கொட்டப்பட்டுவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு (டி.டி.டி.சி.,) சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்.,குழும ஓட்டல் உள்ளது. குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால் இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக எஸ்.ஆர்.எம்.,ஓட்டல் நிர்வாகம்,' நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.
2024 ஜூனில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: குத்தகை ஒப்பந்தம் 1996 ல் போடப்பட்டது. அங்கு மனுதாரர் தரப்பு நட்சத்திர ஓட்டல் கட்டியது. குத்தகைக் காலம் 30 ஆண்டுகள். அது 2024 ஜூன் 13 ல் முடிவடைந்தது. அரசு தரப்பு,' மனுதாரர் தரப்பு குத்தகை தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. சொத்தில் தொடர்வதற்கு மனுதாரருக்கு உரிமை இல்லை.
குத்தகைக் காலம் முடிந்த பின்னரே அவ்வளாகத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்' என தெரிவித்தது. அந்நட்சத்திர ஓட்டலில் பலர் தங்கியுள்ளனர்.
மனுதாரர் 30 ஆண்டுகளாக அங்கு உள்ளார். குத்தகைக் காலம் முடிந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. அதை புதுப்பிப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. ஜூன் 14ல் அவ்வளாகத்திற்குள் நுழைந்து கையகப்படுத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. இவ்வாறு உத்தரவிட்டார்.
எஸ்.ஆர்.எம்.,ஓட்டல் நிர்வாகம், 'குத்தகைக் காலத்தை புதுப்பிக்கக்கோரிய மனுவை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலர் 2024 ஜூன் 12 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்ய வேண்டும்,'என மற்றொரு வழக்கு தாக்கல் செய்தது.
2024 ஜூனில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: அரசு பரிசீலித்த பின், மேலும் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக் காலத்தை புதுப்பிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. விதிகள், நிபந்தனைகளின்படி டி.டி.டி.சி.,யிடம் சொத்தினை ஒப்படைக்க வேண்டும் என நிராகரித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மனுதாரருக்கு வாய்ப்பளிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது ரத்து செய்யப்படுகிறது. இவ்விவகாரம் சுற்றுலாத்துறை முதன்மை செயலருக்கு அனுப்பப்படுகிறது. அவர் மனுதாரரிடம் விசாரித்து, பரிசீலித்து, சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டி.டி.டி.சி.,மேலாண்மை இயக்குனர், சுற்றுலாத்துறை முதன்மை செயலர் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா கதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி வாதிட்டதாவது:
ஓட்டல் நிர்வாகத்திற்குரிய குத்தகைக்காலம் 2024 ஜூன்13 ல் முடிவடைந்து. மறுநாள் அதிகாலையிலேயே அதிகாரிகள் ஓட்டலை கையகப்படுத்தினர். இதனால் ரிட் மனுக்களை தாக்கல் செய்ய ஓட்டல் நிர்வாகத்திற்கு உரிமை இல்லை. குத்தகை விதிமுறைகளை மீறி, சொத்தினை வங்கியில் அடமானம் வைத்து ரூ.56 கோடி கடனை ஓட்டல் நிர்வாகம் வாங்கியது.
ஒப்புக் கொண்டபடி குத்தகைத் தொகை ரூ.40 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நிர்வாகம் உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் சுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது தெளிவாகிறது.
ஒப்பந்தம் காலாவதியாகும்போது, அவ்வளாகத்தின் மீதான தனது அனைத்து உரிமைகளையும் நிர்வாகம் இழக்கிறது. சொத்தின் மீதான உரிமையை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நிர்வாகத்திற்கு உள்ளது. இருப்பினும் தனி நீதிபதி ஓட்டல் நிர்வாகம் கோரிய நிவாரணத்தை வழங்கியுள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வாதிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: டி.டி.டி.சி., 1971 ல் நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனம். அது மாநிலம் முழுவதும் பல்வேறு ஓட்டல்களை நடத்துகிறது. 2023--24 ல் ரூ. 32.33 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
பொருளாதாரக் கொள்கைகள் நீதித்துறையின் மறுஆய்விற்கு உட்பட்டவை அல்ல என உச்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு இயந்திரம் மற்றும் அதன் அதிகாரிகளை குறைவாக மதிப்பிடும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவில் தனிப்பட்ட கருத்து தெரிவித்தது தேவையற்றது.
அவை நீக்கப்படுகின்றன. வழக்கின் முழு உண்மைகள், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தனி நீதிபதியின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டனர்.