/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சரி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சரி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சரி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சரி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 12, 2025 03:57 AM
மதுரை : மதுரையில் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி படிப்படியாக புது ரோடுகள் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஐசக் பால் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் ரோடு ஓராண்டிற்குகூட தாக்குப்பிடிப்பதில்லை. கனமழை பெய்தால் ரோடு சேதமடைந்துவிடுகிறது. தரமாக அமைப்பதில்லை. புதிதாக ரோடு அமைக்கும் போது ஏற்கனவே உள்ளதை முற்றிலும் பெயர்த்து எடுப்பதில்லை. இதனால் ரோட்டின் உயரம் அதிகரிக்கிறது. வீடுகளின் மட்டம் குறைந்துவிடுகின்றன. மழையின்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது.
மழைநீர் கால்வாயை முறையாக பராமரிக்கவில்லை. மண், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் ரோட்டிலிருந்து வடிந்து கால்வாய்க்குள் நீர் புகமுடியாமல் ஓட்டைகள் அடைபட்டுள்ளன. இதனால் ரோட்டில் மண் தேங்கி துாசி பறக்கிறது. மக்களுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிதாக ரோடு அமைக்கும்போது ஏற்கனவே உள்ள ரோட்டை தோண்டி அகற்றிய பின் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். மழைநீர் கால்வாயை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மனுதாரர், அரசு பிளீடர் திலக்குமார், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக் ஆஜராகினர்.
மாநகராட்சி கமிஷனர்,'அரசின் தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றி ரோடு அமைக்கப்படுகிறது. புது ரோடு அமைப்பதற்கு முன் ஏற்கனவே உள்ளதை பெயர்த்து அகற்றவிட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்களின் இயக்கம், இதர பயன்பாட்டை கருத்தில் கொண்டு, ரோடுகளை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது,' என பதில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுவில் பொத்தாம் பொதுவாக கோரப்பட்டுள்ள நிவாரணத்தை முழுமையாக பரிசீலிக்க முடியாது. நீதிமன்றங்கள் இதுபோன்ற பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்கும் பட்சத்தில், அதை நடைமுறையில் செயல்படுத்த முடியாமல் போகலாம்.
மதுரையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதை குறிப்பிடத் தேவையில்லை. விபத்துகளைத் தடுக்க, இயல்பான போக்குவரத்திற்கு ரோடு முறையாக அமைக்கப்பட வேண்டும். சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி படிப்படியாக புது ரோடுகள் அமைக்க வேண்டும். புது ரோடு அமைக்கும் போது அருகிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, தற்போதைய மட்டத்தில் அமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ரோட்டை பெயர்த்தெடுக்க வேண்டும்.
மதுரை மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், மாநகராட்சி கமிஷனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.