/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கச்சநத்தம் கொலை வழக்கு 26 பேருக்கு ஆயுள் உறுதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கச்சநத்தம் கொலை வழக்கு 26 பேருக்கு ஆயுள் உறுதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
கச்சநத்தம் கொலை வழக்கு 26 பேருக்கு ஆயுள் உறுதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
கச்சநத்தம் கொலை வழக்கு 26 பேருக்கு ஆயுள் உறுதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 27, 2026 06:28 AM

மதுரை: சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கோயில் திருவிழா முதல் மரியாதை பிரச்னையில் 3 பேரை கொலை செய்த வழக்கில் 26 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது. ஒருவர் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.
கச்சநத்தம் கருப்பண சுவாமி கோயில் திருவிழா 2018 ல் நடந்தது. முதல் மரியாதை பெறுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒரு தரப்பினர் ஆயுதங்களுடன் கச்சநத்தத்தில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தினர். அரிவாளால் வெட்டியதில் சண்முகநாதன் 31, ஆறுமுகம் 65, சந்திரசேகர் 34, பலியாகினர். மோதலில் சுகுமாறன் 23, தனசேகரன் 32, உட்பட 5 பேர் காயமடைந்தனர். தனசேகரன் 2020 ஜன.,16 ல் இறந்தார். பழையனுார் போலீசார் 33 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இதில் 2 பேர் இறந்தனர். சிறுவர்கள் 3 பேர், தலைமறைவான சிலரை தவிர்த்து 27 பேர் மீதான விசாரணை சிவகங்கை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அந்நீதிமன்றம் 2022 ஆக.5ல் சுமன் 30, அருண் 28, சந்திர குமார் 54, அக்னிராஜ் 27, ராஜேஷ் 29, இளையராஜா 30, கனித்குமார் 26, கருப்புராஜா 36, மைக்கேல் முனியாண்டி 37, மீனாட்சி 47, செல்வி 44, உட்பட 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுமன் உட்பட 27 பேரும் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பகத்சிங், மயில்வாகனன் ராஜேந்திரன் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பவத்தின்போது கச்சநத்தத்தில் இளையராஜா இல்லை. அவர் வெளியூரில் இருந்துள்ளார். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. சுமன் உள்ளிட்ட 26 பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தர விட்டனர்.

