/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதிக்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
/
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதிக்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதிக்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதிக்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 07, 2025 03:05 AM
மதுரை:'உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பொது இடங்களில் சிலைகள் அமைக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நம்பி பத்து பால்சாமி தாக்கல் செய்த மனு:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மற்றும் பெயர் பலகை வடக்கு வள்ளியூர் மெயின் ரோடு வள்ளியூர் காய்கறி சந்தை பொது நுழைவுவாயில் அருகில் நிறுவப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அந்த மனுவை விசாரித்தது.
அரசு தரப்பு: சந்தை அருகே சிலையை நிறுவ வேண்டாம் என கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை அமைப்பது தொடர்பான குறிப்பிட்ட அரசாணை திரும்பப் பெறப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: பொது சாலைகள், நடைபாதைகள், பிற பொது பயன்பாட்டுக்குரிய இடங்களில் இனி எந்த சிலையையும் நிறுவ அல்லது எந்தவொரு கட்டமைப்பையும் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என, உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, 2021ல், அனைத்து பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், பொது சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் 'தலைவர்கள் பூங்கா' உருவாக்க வேண்டும். அங்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சிலைகள், கட்டமைப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அத்தகைய அனுமதி எதிர்காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
அரசாணையை திரும்பப் பெறுவதை நிறைவேற்றியது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை, ஜூன் 16க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.