/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகளுக்கு தண்டனை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 20, 2024 06:30 AM
மதுரை, : திருச்சி மாவட்டம் குண்டூர் காந்திநகரில் ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை நிறைவேற்றாவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி அண்ணாநகர் சாந்தி தாக்கல் செய்த மனு: திருவெறும்பூர் அருகே குண்டூரில் காந்தி நகர் உள்ளது. அதிலுள்ள பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது. அகற்றக்கோரி திருச்சி கலெக்டர், திருவெறும்பூர் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
இரு நீதிபதிகள் அமர்வு, 'தாசில்தார் அளவீடு செய்ய வேண்டும். மனுதாரர், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் அகற்ற 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என 2022 டிச.1ல் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவில்லை. தாசில்தார் ரமேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. அதன் மூலம் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அகற்ற முடியவில்லை. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.
குடிநீர் வினியோக அமைப்பை அகற்ற கால அவகாசம் தேவை. குடிநீர் தொட்டி தவிர மற்ற கட்டுமானங்கள், குப்பை அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: போட்டோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிலைகள் அகற்றப்பட்டாலும், கட்டமைப்புகள் அப்படியே உள்ளன. பூங்காவிற்கு ஒதுக்கிய பகுதியில் குப்பை தேங்கியுள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் தவிர மற்ற கட்டமைப்புகளை அகற்றி, அப்பகுதியில் வேலி அமைக்க வேண்டும். குப்பையை அகற்ற வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றாவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக அக்.23ல் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.